வட அயர்லாந்தில் ஒஃபெலியா புயல் தாக்கம் காரணமாக இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் வாழும் வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதனால் வட அயர்லாந்தில் 15 அயிரம் வீடுகள் வரை நேற்று இருளில் மூழ்கியதாக மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் தீவுகளை நேற்று (திங்கட்கிழமை) ஒஃபெலியா புயல் தாக்கும் என எச்சரித்திருந்த பிரித்தானிய தேசிய வானிலை சேவை மையம் மணிக்கு 130 கிலோ மீற்றர் வேகத்தில் இந்தப் புயல் வீசும் எனவும் பாரிய சேதத்தை ஏற்படுத்தும் எனவும் தொிவித்திருந்தது. இந்த நிலையில் மணிக்கு 176 கிலோ மீற்றர் வேகத்தில் புயல் தாக்கியுள்ளது.
அத்துடன் வட அயர்லாந்தில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. பிரித்தானிய நேரப்படி 15.00 மணி முதல் அம்பர் எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் (திங்கட்கிழமை) வடஅயர்லாந்தில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. டப்ளின் விமான நிலையத்தின் விமான சேவைகள் அதிகாலையில் இயங்கினாலும், புயல் தாக்கத்தின் பின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.