பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கு ஏற்ற வகையில் புலனாய்வு குழுவினை அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. மராட்டியத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதுடன் பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, தற்கொலைக்கு தூண்டப்படுதல் போன்ற பல வழக்குகளில், பெண்களிடம் விசாரணை மேற்கொள்வதில் ஆண் காவல்துறை அதிகாரிகளுக்கு சங்கடம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பெண்கள் அவர்களிடம் வெளிப்படையாக பிரச்சினைகளை கூற தயக்கம் காட்டுவதனால் விசாரணைகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்தநிலையில் இதுபோன்ற வழக்குகளில் எளிதில் தீர்வு காண்பதற்கும், பெண்களின் பிரச்சினைகளை திறமையாக கையாள்வதற்கும் ஏற்ற வகையில் புலனாய்வு குழு அமைக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி மாவட்டந்தோறும் 16 பேர் கொண்ட புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. இதில் உதவிப் காவல்துறை அதிபர் தலைமையில் 4 அதிகாரிகளும், 12 காவல்துறையினரும் செயல்படுவார்கள்.
இந்தக் குழுவிடம் பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முதற்கட்டமாக மும்பை, தானே, புனே, நாக்பூர் நகரங்கள் உள்பட 7 பகுதிகளில் நிலுவையில் உள்ள பெண்களுக்கு எதிரான சிறிய குற்றவழக்குகள் இந்த சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது