144
எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி
மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும்
அழைக்கப்படும்போதெல்லாம்
சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும்
எனது வீடுகளில் எந்த வேளையிலும்
சோதனைகள் நடத்துவதையும்
அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி
என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும்
எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும்
எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும்
எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன்
பார்த்துச்செல்லும்போதும்
துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின்
மரணத்தின் சந்தேகத்தையும்
இன்னுமின்னும் எல்லாவற்றையும்
சகிக்கப்பழகிவிட்டேன்
எத்தனையோ தடவை ரோந்து சென்றுவிட்ட பின்னும்
இராணுவத்தைப் பார்த்து குரைக்கும்
என் வீட்டு நாயிற்க்குத்தான்
இன்னும் சகிக்கத் தெரியவில்லை.
Spread the love