புதிய மென்பொருள் அமலாக்கத்தை 3 மாதங்கள் தள்ளி வைக்கும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வருமான வரித்துறையில் தற்போதுள்ள ஏ.எஸ்.டி. மென்பொருளை அகற்றிவிட்டு, ஐ.டி.பி.ஏ. என்ற அதிநவீன மென்பொருளை 7 மெட்ரோ நகரங்களில் படிப்படியாக அமல்படுத்த மத்திய நேரடி வரிகள் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த மென்பொருளுக்கு ஊழியர்கள் பழகும்வரை, வெளியில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், புதிய மென்பொருள் அமலாக்கத்தை 3 மாதங்கள் பிற்போடுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு, மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.