புங்குடுதீவை சேர்ந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை சென்ற வேளை கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று, கடந்த 29.05.2017 ஆம் திகதி முதல் நீதாய (ரயலட் பார்) விளக்க முறையில் யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
குற்ற சம்பவம் நடைபெற்று 898 நாட்களுக்கு பின்னர் கடந்த 27ஆம் திகதி தீர்ப்பயத்தால் குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்தும், 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அத்துடன் குற்றவாளிகள் ஏழு பேரும் மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் , 2, 3, 5 மற்றும் 6ஆம் இலக்க குற்றவாளிகள் 40ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்த வேண்டும் எனவும் , ஏனைய 4, 8 மற்றும் 9ஆம் இலக்க குற்றவாளிகள் 70 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செல்லுத்த வேண்டும் என தீர்ப்பாயம் தீர்ப்பளித்து இருந்தது.
தற்போது சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும், குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில், குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்நிலையில் , புங்குடுதீவை சேர்ந்த சிலரிடம் குறித்த வழக்கு தொடர்பிலும் , வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பிலும் கருத்து கேட்ட போது ,
புங்குடுதீவில் பிறந்து வளர்ந்த மக்கள் 1948 க்கு முன்னர் எவரும் யாழ்ப்பாணம் சென்றதில்லை. புங்குடுதீவு மண்ணிலே விவசாயம் செய்து தமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொண்டார்கள். அக்கால பகுதியில் பத்து வீதமானவர்களே யாழ்.நகர் பகுதிகளுக்கு சென்று ஆடைகள், இரும்பு பொருட்கள் போன்றவற்றை கொள்வனவு செய்து வருவார்கள். ஏனையவர்களுக்கு யாழ்ப்பாணம் எப்படி இருக்கும் என்றதே தெரியாது.
அதன் பின்னரான கால பகுதியில் புங்குடுதீவை சேர்ந்த மக்கள் விவசாய நடவடிக்கைகளுக்காக சிலர் வன்னியை நோக்கி நகர்த்னர் குறிப்பாக கிளிநொச்சி, வட்டக்கச்சி போன்ற பிரதேசங்களுக்கு சென்றனர்.
புங்குடுதீவு மக்கள் வசதியானவர்களாகவே வாழ்ந்தனர். 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் கொழும்பு வருமானம் நின்று போனது. கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களின் வர்த்தகங்கள் நிர்மூலம் ஆனது.
அதன் பின்னரான கால பகுதியில் உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1991 புங்குடுதீவு மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
பின்னர் 2009களில் யுத்தம் முடிவடைந்த பின்னர் புங்குடுதீவு மக்கள் மீள குடியேறினார்கள். அதற்கு முன்னரே மக்கள் மீள் குடியேற தொடங்கி இருந்தாலும் யுத்தம் முடிவடைந்த பின்னரே பயமின்றி மீள் குடியேறினார்கள். அதன் போது பெரும்பாலான வெளிப்பிரதேச மக்களும் புங்குடுதீவில் குடியேறினார்கள். தற்போது புங்குடுதீவில் வசிப்பவர்களில் 50 வீதத்திற்கு மேலானோர் வெளி பிரதேச மக்களே .
இடம்பெயர்ந்து சென்ற புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட பலர் இன்னமும் ஊருக்கு திரும்பி வரவில்லை. வசதி குறைந்தோரே குடியேறினர். அதனால் வாழ்க்கை முறை சீரழிய தொடங்கியது. தடியெடுத்தவன் எல்லாம் அதிகாரம் செலுத்த தொடங்கினான். அதற்கு புங்குடுதீவில் இருந்த சில காடைய அமைப்புகள் ஆதரவு வழங்கியதுடன் அவர்களும் சீரழிக்க தொடங்கினார்கள். .
புங்குடுதீவினை விட்டு இடம்பெயர்ந்து இன்னமும் மீள குடியமர விரும்பாமல் வெளிநாடுகளிலும் வேறு பிரதேசங்களில் வாழும் மக்கள் இங்குள்ள காணிகளை துப்பரவு செய்ய மாட்டார்கள். காணி இல்லாதவர்கள் காணிகளை வாங்க தயார் ஆனால் அதனை விற்பனை செய்ய எவரும் விரும்பலை. இதனால் இன்று புங்குடுதீவு பற்றை காணிகளாக காட்சி அளிக்கின்றன.
கடந்த 1960ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் புங்குடுதீவில் நன்னீர்வளம் இருந்தது. அதன் பின்னர் யுத்தம் காரணமாக இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் தீவாக பகுதிகளில் அதிகளவில் நிலைகொண்டு உள்ளமையால் அவர்களுக்கு நாளொன்றுக்கு 1 இலட்சம் லிட்டருக்கும் அதிகமான நீர் தேவைப்படுகின்றது. அதனால் தினமும், 5, 6 பவுசர்களில் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.
அதனால் புங்குடுதீவு மற்றும் சாட்டி பகுதிகளில் உள்ள நன்னீர் மூலங்கள் உவர் நீராக மாற்றம் அடைய தொடங்கியுள்ளது. புங்குடுதீவு, ஊர்காவற்துறை , மண்டைதீவு அல்லைபிட்டி , மண்கும்பான் இராணுவ , கடற்படை முகாம்களுக்கு புங்குடுதீவு மற்றும் சாட்டி பகுதிகளில் உள்ள நன்னீர் கிணறுகில் இருந்தே நீரினை எடுத்து சென்று தமது அன்றாட தேவைகள் , விவசாய தேவைகளுக்கு பயன்படுத்து கின்றார்கள்.
இந்த நிலமை தொடர்ந்தால் தீவகத்தில் நன்னீர் உவநீராக மாற்றம் அடைந்து விடும். தீவகத்தில் மக்கள் மீள் குடியேற விருப்பததன் முக்கிய காரணமாக நீர் பிரச்சனை உள்ளது. எனவே மேலும் நன்னீர் உவர்நீராக மாறாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். என தெரிவித்தார்.
மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட சந்திரஹாசன், சசீந்திரன் என்பவர்கள் ஏற்கனவே ஊரில் பல குற்றங்களை செய்த குற்றவாளிகள். மாணவியை ஒரு தலையாக காதலித்ததாக கூறப்படும் துஷந்த் எனும் குற்றவாளி குறிகட்டுவான் வாகன தரிப்பிடத்தில் வேலை செய்த போது பண மோசடியில் ஈடுபட்டதனால் , பிரதேச சபையினால் வேலையால் நீக்கப்பட்டார். அப்போது அவர்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கு மற்றும் தலையீடு காரணமாக மீண்டும் பிரதேச சபை தண்ணீர் பவுசர் சாரதியாக வேலைக்கு அமர்த்தப்பட்டார். (மாணவி கொலை வழக்கில் கண்கண்ட சாட்சியங்கள் மற்றும் தற்போது குற்றவாளியாக உள்ள நபர், எதிரியாக இருந்த போது மன்றில் சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கும் போதும் , பிரதேச சபை கடமை நேரத்தில் மாப்பிள்ளை என அழைக்கபப்டும் நடராஜா புவனேஸ்வரன் வீட்டில் கள்ளு அருந்த செல்வது உண்மை என சாட்சியம் அளித்திருந்தார்கள். )
மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் ஊரில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்களின் குற்ற செயலுக்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் அக் கால பகுதியில் கடமையாற்றிய தமிழ் மொழி பேசும் காண்ஸ்டபில் தர உத்தியோகஸ்தர்கள் இந்த குழுவுக்கு உடந்தை அளித்து வந்தனர். பொலிஸ் உடந்தை இருந்ததால் தான் அவர்கள் பயமின்றி குற்ற செயலில் ஈடுபட்டனர். (மாணவி கொலை வழக்கு விசாரணையின் போது பொலிஸ் சாட்சியங்களிடம் சந்தேக நபர்களாக இவர்களை கைது செய்த போது ஏன் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லாது , குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்றீர்கள் என சட்டத்தரணிகள் கேட்ட போது , இவர்களுக்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் உதவி புரிய கூடிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருப்பதனால் , இவர்களை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றால் உரிய விசாரணைகளை முன்னெடுக்க முடியாது. அதனால் தான் தாம் குற்றவாளிகளை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு கொண்டு சென்றதாக சாட்சியம் அளித்திருந்தனர். )
இந்த வழக்கில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு, கண் கண்ட சாட்சியமாக சாட்சி கூறிய உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் இந்த குர்ரவாளிகளுடன் சேர்ந்து பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர். 2015.05 .17ஆம் திகதி இரவு சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமருடன் ஆட்டோவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற போது வேலணை துறையூர் சந்தியில் சுவிஸ்குமாரை பொது மக்கள் மடக்கி பிடித்த போது ஒரு நபர் தப்பியோடி இருந்தார். அவர் உதயசூரியன் சுரேஷ்கரன் தான் அன்றைய தினம் தப்பியோடியவர். அவர் பற்றிய தகவல்களை ஊரவர்கள் பொலிசாரிடம் வழங்கி இருந்தனர். இருந்த போதிலும் போலீசார் சுரேஷ்கரனை கைது செய்யவில்லை. பின்னர் குற்றவாளிகளிடம் குற்றபுலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே சுரேஷ்கரன் கைது செய்யபட்டார்.
தடயவியல் போலீசார் தமது கடமைகளை உரிய முறையில் செய்யவில்லை என நினைக்கிறேன். சுவிஸ்குமார் தங்கி இருந்த வீடு எரிக்கப்பட்டது. வீடு எரிக்கப்பட்ட பின்னர் அந்த வீட்டில் கமரா ஒன்று காணப்பட்டது. கைத்தொலைபேசி ஒன்றும் உடைந்த நிலையில் காணப்பட்டது. அவற்றை தடயவியல் பொலிசார் ஆதாரமாக சேகரிக்க வில்லை.
குற்றவாளிகளான சந்திரஹாசன், துஷாந்த், நிஷாந்தன், சசீந்திரன் மற்றும் சுவிஸ் குமார் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான் இருப்பார்கள். கண்ணகி அம்மன் ஆலய திருவிழா கால பகுதியில் இங்கு வந்து மது அருந்துதல் , மாடு, ஆடு, கோழிகளை களவாடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். அத்துடன் ஆட்கள் அற்ற வீடுகளை உடைத்து இரும்புகளை திருடி இரும்பு வியாபாரிகளுக்கு அவற்றை விற்பனை செய்வார்கள்.
மது போதையில் ஊரில் உள்ள பெண்களுடன் சேட்டை புரிவார்கள், அடிதடி அடாவடிகளில் ஈடுபடுவார்கள். அவ்வாறு ஈடுபடும் போது பிரச்சனை பெரிதாகி விட்டால் , கொழும்புக்கு ஓடி விடுவார்கள். கொழும்பில் இந்த வழக்கில் விடுதலையான கோகிலன் என்பவர் மட்டுமே வீட்டில் இருப்பவர். இவர்கள் லொட்ஜ்ல தான் தங்கி இருப்பார்கள். பின்னர் இங்கு தான் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஓய்ந்த பின்னர் ஊருக்கு வந்து மறுபடியும் தமது செயல்களில் ஈடுபடுவார்கள்.
மாணவி கொலை நடப்பதற்கு ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தம்பதிகள் புங்குடுதீவில் வாடகை வீடொன்றில் தங்கி இருந்தனர். ஒரு நாள் இரவு இந்த வழக்கின் குற்றவாளிகளான சந்திரஹாசன் சசீந்திரன் உள்ளிட்டவர்கள் அந்த இளம் தம்பதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்து கணவனை தாக்கி ,கணவனை கத்தி முனையில் வைத்து இருந்து மனைவியை கணவன் கண் முன்னால் வன்புணர்ந்தார்கள்.
அந்த சம்பவம் தொடர்பில் கணவன் மனைவியால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபப்ட்டது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் , சந்திரஹாசன், சசீந்திரன் உள்ளிட்டோரை ஊர்காவற்துறை போலீசார் அழைத்து விசாரணை செய்திருந்தனர். பின்னர் அந்த முறைப்பாட்டுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை, கணவன் மனைவியும் ஊரை விட்டு சென்று விட்டனர்.
மாணவி கொலை வழக்குக்காக நீதிமன்றில் முன்னிலையாக சட்டத்தரணி கே.வி தவராசாவை புலம்பெயர் அமைப்புக்கள் கேட்டு இருந்தன. அதன் பிரகாரம் அவரும் மன்றில் முன்னிலையானர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜீன் முதலாம் திகதி மன்றில், சுவிஸ் குமார் எப்படி தப்பினார் ? என்பது தொடர்பில் பூரண விசாரணை நடத்த வேண்டும் என விண்ணப்பம் செய்தார். அதன் பின்னரான வழக்கு விசாரணைகளில் கே.வி தவராசாவை முன்னிலையாக விடாது சிலர் தடுத்தனர்.
அதன் பின் பல அரசியல்கள் இருக்கின்றன. தீர்ப்பாய தீர்ப்பின் போது , நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூட சுவிஸ் குமார் தப்பி சென்றமை மற்றும் உதவியவர்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்காமல் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்து இருந்தமையினால் தான், விசாரணைகள் விரைவில் முடிக்கப்பட்டது. பிணையில் விடுவிக்கப்பட்டு, இருந்தால் அவர்கள் நாட்டை விட்டு எவ்வாறோ தப்பி சென்று இருப்பார்கள். அவர்களை பிணையில் விடாது தொடர்ந்து விளக்க மறியலில் வந்தது விசாரணைகளை நடாத்தியமைக்காக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
அதேபோன்று இந்த வழக்கு கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணைகள் நடத்தப்பட்டு இருந்தால் , வழக்கு நீர்ந்து போய் இருக்கலாம் குற்றவாளிகள் தப்பி இருக்கலாம். என தெரிவித்தார்.
எனது பிள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராடி பல இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு நன்றி. அதேவேளை இந்த வழக்கு
கொழும்புக்கு மாற்றம் செய்யப்பட போவதாக தகவல்கள் வெளியான போது , அதற்கு எதிராக யாழ்ப்பணத்தில் போராட்டத்தினை நடத்தியவர்களுக்கும் நன்றி. இந்த வழக்கு யாழ்ப்பாணத்தில் நடந்தமையால் தான் மிக விரைவாக நல்லதொரு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைகளை துரிய கெதியில் நடத்த ஒத்துழைந்த அனைவருக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி.
எனது பிள்ளையை கொன்ற குற்றவாளிகளை எமக்கு இழப்பீடு வழங்க கூறி தீர்ப்பில் கூறப்பட்டது. அந்த குற்றவாளிகளின் ஒரு சதமும் எமக்கு வேண்டாம். என தெரிவித்தார்.
மாணவியின் கொலைக்கு முன்னரும் சில கொலைகள் இந்த கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த மாணவியின் கொலை விசாரணையில். இந்த அரசாங்கம் காட்டிய அதீத அக்கறை , மக்களின் தீவிர போராட்டம் இதற்கெல்லாம் இந்த தீர்ப்பு சரியான பதிலை தந்துள்ளது.
இந்த கொலைக்கு முன்னரான மூன்று தசாப்த கால பகுதியில் இலங்கையில் சட்டம் ஒழுங்கு நடைமுறை சீராக இருக்கவில்லை இந்த கொலையின் பின்னர் தான் உரிய முறையில் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்த படுகின்றது.
கடந்த காலங்களில் சட்டம் ஒழுங்கு நடைமுறையில் இல்லாத கரணத்தால் தான் இவ்வாறான குற்றவாளிகள் உருவாகினார்கள்.
ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் 40 ஆயிரம் மக்கள் இருந்தார்கள் தற்போது 4ஆயிரம் மக்களே இருக்கின்றார்கள்.
அவ்வாறு கைவிடப்பட்ட கிராமத்தில் வாழ்பவர்கள் பதப்படாமல் பண்படாமல் வாழ்ந்து விட்டார்கள். அது அவர்களின் தவறில்லை. இந்த கால கட்டம் அவர்களை அவ்வாறு உருவாக்கிவிட்டது. எல்லோரையும் இல்லை ஒரு சிலர் அவ்வாறு உருவாகி விட்டார்கள்.
இந்த தீர்ப்பின் பின்னர் இவ்வாறான குற்றங்கள் நடைபெற மாட்டாது. இதற்கு முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு கூட கொலைகள் நடைபெற்றுள்ளது.
தண்டனை கொடுப்பதனால் மாத்திரம் குற்றத்தை கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான குற்றங்களை ஏன் செய்கின்றார்கள் என்பதனையும் அதன் பின்புலன்களையும் அறிய வேண்டும். அதனூடகவே குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. முரட்டு தனமாக மக்கள் வாழும் நாடுகளில் தான் தலையை வெட்டுதல் , கல்லெறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றது. நாங்கள் நாகரிகமானவர்கள் நாங்கள் குற்றவாளிகளுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டியதில்லை. ஆனால் குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் அவர்கள் சமூகத்திற்கு தேவையில்லாதவர்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கபட்ட போதிலும் , இலங்கையில் மரணதண்டனை தற்போது நிறைவேற்றபடுவதில்லை என்பதனால் அவர்கள் ஆயுள் முழுவது சிறையில் தான் தமது காலத்தை கழிக்க போகின்றார்கள். இது அவர்களுக்கு நல்லதொரு தண்டனை.
இன்றைக்கு எல்லோர்கையிலும் ஊடகங்கள் உள்ளன.அதனால் எல்லோரும் தங்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றார்கள் . அது தீமையான செயலும் இல்லை. சாதாரண மக்களின் கையில் ஊடகங்கள் உள்ளதால் பல நன்மைகள் நடைபெற்றுள்ளன.
மாணவி கொலை தொடர்பில், சில இடங்களில் தேவையற்ற விசமதனமான அரசியல் சுயலாபத்தோடு கருத்துக்கள் பரப்பப்பட்டன. அதனால் விசாரணைகளை கூட திசை மாற்ற முயற்சித்தனர். இதானல் சாதாரண மக்கள் உண்மை தன்மையை அறிந்து கொள்ள முடியவில்லை.
எதிர்பார்த்ததை விட நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. நேர்மையான விசாரணை நடைபெற்று நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. அதற்கு ஒரு நன்றி கூறாமல், பிறகும் பிறகும் தேவையற்ற விசமதனமான கருத்துக்களை சிலர் பரப்பி வருகின்றனர். இது நன்மை பயக்க போவதில்லை.
இந்த மாணவியின் கொலை இவ்வளவு தூரம் பரபரப்பாகி தீர்ப்பு விரைவில் கிடைக்க காரணம் , இந்த கொலை கொடூரமான கொலை அத்துடன் கொலை நடந்த கால பகுதியில் தேர்தல் முன்னாயத்த வேலைகள் நடைபெற்ற கால பகுதி என்பதனால், அதனால் இந்த வழக்கு பல வடிவங்களில் பேசப்பட்டு திணிக்கப்பட்டது.
தற்போது நீதியான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளார்கள். என தெரிவித்தார்கள்.
அதேவேளை குற்றவாளிகளுக்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன மேன்முறையீடு முடிவு கிடைப்பதற்கு குறைந்த பட்சம் 5 வருடங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் , குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாய (ராயலட் பார் ) விசாரணை பதிவேடுகள் சுமார் 4ஆயிரம் பக்களைகொண்டு உள்ளன. அவற்றினை சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்ய குறைந்த பட்சம் ஒரு வருட காலம் தேவைப்படும்.
அதன் பின்னர் பிரதம நீதியரசர் 5 நீதியமைச்சர்களை நியமித்து , அந்த நீதியமைச்சர் குழாம் குறித்த வழக்கினை முழுமையாக படிக்க வேண்டும்.
அதன் பின்னர் விசாரணைகளுக்கு திகதியிட ப்பட்ட பின்னர் , வழக்கில் ஒவ்வொரு விடயத்திலும் விடப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்ட முடியும். அவ்வாறாக மேன்முறையீட்டின் இறுதி முடிவு கிடைக்க குறைந்த பட்சம் 5 வருடங்களுக்கு மேலாகும் என எதிர்ப்பார்க்கிறேன். என தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.