வரவு செலவு கணக்கை தாமதமாக தாக்கல் செய்த தொண்டு நிறுவனங்களிடமிருந்து, இந்த ஆண்டில் இதுவரை 5 கோடி ரூபாவுக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரவு செலவு கணக்கை குறித்த காலத்தில் தாக்கல் செய்யாத நிறுவனங்கள் அபராதத் தொகையுடன் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் எதிரொலியாக, இந்த ஆண்டில் செப்டம்பர் மாத இறுதி வரையில், காலதாமதமாக வரவு செலவு கணக்கை தாக்கல் செய்த நிறுவனங்களிடமிருந்து 5 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதென மத்திய உள் துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி தொண்டு நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். எனினும் காலதாமதமாக தாக்கல் செய்யும்போது இவ்வாறு அபராதம் வசூலிக்கப்படுகிறதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் தொண்டு நிறுவனங்களுக்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதுடன் 3 ஆண்டுகளுக்கு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாத சுமார் 10 ஆயிரம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.