குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரித்தானியாவில் வாழும் இந்தியரான வீரேந்திர சர்மா, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருப்பது பிரித்தானியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாக அவர் முன் மொழிந்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பிரித்தானிய அரசு இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் தீர்மானத்தை நிறைவேற்ற நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வீரேந்திர சர்மா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
99 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலப் பகுதியில் நடந்த கரை படிந்ததொரு நிகழ்வே ஜாலியன்வாலா பாக் படுகொலை. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி பிரித்தானிய இராணுவ அதிகாரி ரெஜினோல்ட் டேயர் தலைமையில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் படுகொலை இது. பிரித்தானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராக அக் கால கட்டத்தில் இந்தியப் பிராந்திய மக்கள் ஒன்றுபட்டு போராட்டத்தை முன்னெடுத்தார்கள். பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, பால கங்காதர திலகர், அன்னி பெசன்ட், மகாத்மா காந்தி முதலியோர் தலைமையில் இந்தியப் பிராந்தியம் எங்கும் தொடங்கிய அமைதி வழிப் போராட்டங்கள் பிரித்தானியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
சத்தியாக்கிரம் பிரிட்டிஷ் அரசுமீதான பேராபத்து என அக் காலத்தில் பிரித்தானிய கருதியதாக கூறப்படுகின்றது. பிரித்தானியாவுக்கு எதிரான எழுச்சியை ஆரம்ப கட்டத்திலேயே நசுக்கி விட வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1919 மார்ச் 1ஆம் திகதி இந்தியப் பிராந்தியத்தில் சத்தியாக் கிரகப் போராட்டங்கள் முனைப்பு பெற்றன. இதனையடுத்து பிரித்தானிய ஆட்சியாளர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு எதிராக சிட்னி ரௌலட் தலைமையில் ஒரு குழுவை அமைத்தனர். வட இந்தியாவின் பஞ்சாப், வங்காளம் முதலிய மாநிலப் பகுதிகளில் ஜெர்மனிய, மற்றும் போல்ஷெவிக் நாடுகளின் ஆதரவும் தொடர்பும் இருப்பதாக பிரித்தானியா கூறியது.
இதனையடுத்து குறித்த மாநிலங்களை ஒடுக்க, சிட்னி ரளலட் தலைமையில் ஒரு குழுவின் பரிந்துரையின் பேரில் ரௌலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஊடகங்கள் மிக இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கருத்துச் சுதந்திரத்தின்மீது பாரிய அடக்குமுறை ஏற்படுத்தப்பட்டது. அத்துடன் அமைதிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும், அவர்களை எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் இடுவதற்கும் இச்சட்டம் வழி சமைத்தது. மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட இச் சட்டம் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது. போராட்டக் காரர்கள்மீது எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ள பிரித்தானியப் படைகளுக்கும் காவல்துறைக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
எவ்வாறெனினும் இந்தியப் பிராந்திய மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்த இயலவில்லை. தனித் தனி இராட்சியங்களாக அரசாண்டு வாழ்ந்த வரலாற்றைக் கொண்ட இந்தியப் பிராந்திய மக்கள் ஒன்றுபட்டு பிரித்தானிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைத் தீவில் தமிழ் இராட்சியமாகவும் சிங்கள இராட்சியமாகவும் இருந்த மக்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமைக்கு ஒப்பானது. இந்த நிலையில்தான் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஜாலியான் வாலாபாக் திடலில் பெருமளவான மக்கள் கூட்டம் திரண்டது. அத்துடன் மார்ச் 30ஆம் திகதி மாபெரும் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புது டில்லியில் நடைபெற்ற ஹர்த்தாலின்போது பிரித்தானிய காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் எட்டுப் பேர் பலியாகினர்.
மக்கள் விழிப்படைந்து போராட்டங்களை முன்னெடுத்தமை பிரித்தானிய அரசுக்கு அச்சுறுத்தலான அமைந்தது. பிரித்தானிய அரசு கொண்டு வந்த ரௌலட் சட்டத்துக்கு எதிராக மக்களிடையே எழுச்சி பரவலடைந்தது. கண்டனக் கூட்டங்களும் எதிர்ப்புக் கூட்டங்களும் மக்களின் எழுச்சியுடன் நடைபெற்றன. இதனை முறியடிக்க பிரித்தானிய அரசு திட்டம் ஒன்றை தீட்டியது. மக்களின் கிளர்ச்சியை கட்டுப் படுத்த தீர்மானித்த பிரித்தானியா அதற்காக மாபெரும் படு கொலை ஒன்றை நடாத்த திட்டமிட்டது. அதுவே ஜாலியன்வாலாபாக் படுகொலை ஆகும். மனித குலத்திற்கு விரோதமாக அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்த படுகொலை அதுவாகும்.
அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் மைதானத்தில் பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். நான்கு புறமும் சுவரால் சூழப்பட்ட அந்த மைதானத்திற்கு செல்ல ஒரே ஒரு குறுகிய வழி மாத்திரமே காணப்பட்டது. பிரித்தானிய இராணுவ ஜென்ரல் ரெஜினோல்ட் டயர், 100 பிரித்தானிய வெள்ளையின படைகளையும் இந்திய சிப்பாய்கள் 50பேரையும் அழைத்துக் கொண்டு மக்கள் கூடியிருந்த மைதானத்திற்குள் நுழைந்தான். எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அங்கு திரண்டிருந்த மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஜென்ரல் ரெஜினோல்ட் டயர் உத்தரவிட்டான்.
மக்கள் திக்குமுக்காடினர். துப்பாக்கி ரவைகள் துளைத்து அந்த இடத்திலேயே செத்து வீழ்ந்தனர். அந்த மைத்தானத்தின் சிறிய வாசலை தேடி முண்டியடித்து ஓடியபோதும் அவர்களால் வெளியேறிவிட முடியவில்லை. சுவர்களின்மீது ஏறி வெளியில் செல்ல முயற்சித்தனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பிக் கொள்ள மைதானத்தின் நடுவில் இருந்த கிணற்றுக்குள் குதித்தனர். அவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்தவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அப்படி சுமார் 120 பேர் பலியானதாக சொல்லப்படுகின்றது. இப் படுகொலையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இப்படு கொலை நடைபெற்ற நாள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பிரித்தானியர்களால் துயரமாக்கப்பட்ட ஒரு நாளாக கருதப்படுகின்றது. அன்று பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருந்த பிரித்தானியர் சேர் மைக்கல் ஒட்வையார், பிரித்தானிய இராணுவ ஜென்ரல் ரெஜினோல்ட் டயரின் இந்த நடவடிக்கை தனக்கு உடன்பாடான நடவடிக்கை என்று கூறினார். சேர் மைக்கல் ஒட்வையாரின் கட்டளையின் பிரகாரம் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலையாக இது அரங்கேறியது. இப்படுகொலையை விசாரணை செய்ய ஹெண்டர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதன்போது ஜென்ரல் ரெஜினோல்ட் டயர்(1919 ஓகஸட் 25 அன்று) அளித்த வாக்குமூலம் மிகவும் முக்கியமானதாகும்.
“நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.” என்றார் டயர்.
இந்தக் கொலை இடம்பெற்று 99 ஆண்டுகளின் பின்னர் இதற்கான நீதியை இந்தியவை பூர்வீகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். அமைதியுடன் ஒன்று கூடிய அப்பாவி மக்களை கொடூரமாக கொன்று குவித்ததை ஏற்க முடியாது என்று கூறியுள்ள வீரேந்திர சர்மா இதற்கு பிரிட்டன் அரசு முழு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துயர சம்பவத்தை நினைவு தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இந்தியாவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 13ஆம் திகதி ஜாலியன்வாலா பாக் படுகொலை தினமாக கொண்டாடப்புடுகிறது.
இந்தப் படுகொலைக்கு பிரித்தானியா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இதற்கான நஷ்ட ஈட்டை பஞ்சாப் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுகின்றது. இந்தியா விடுதலை பெற்று ஐம்பதாவது ஆண்டு இடம்பெற்ற பொன்விழா நிகழ்வுக்கு 1997இல் வருகை தந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது கணவர் எடின்பரோ ஜாலியன்வாலா பாக் படுகொலை நினைவிடம் சென்றனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி இடம்பெற்றிருப்பதாக எலிசபெத் கூறிய கருத்து அப்போது விமர்சிக்கப்பட்டது. 2013இல் இந்தியாவுக்கு வருகை தந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இப் படுகொலைக்கு மன்னிப்புக் கோரினார்.
ஒரு படுகொலை இடம்பெற்று கிட்டத்தட்ட 100 வருடங்களுக்குப் பின்னரும் அதற்கான நீதி வலியுறுத்தப்படுகின்றது. ஜாலியன்வாலா பாக் படுகொலை இன்றும் பஞ்சாப் மக்களிடமும் இந்திய மக்களிடமும் நீங்காத நினைவாக வடுவாக நிலைத்துவிட்டது. பிரித்தானியா புரிந்த கரையாக படிந்துவிட்டது. இந்தியா, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டபோதும் இப் படுகொலை இந்திய பிராந்திய மக்களால் மறக்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. ஒரு படுகொலையை இன்னொரு படுகொலையுடன் ஒப்பிட முடியாது. ஒரு கொடுமையை இன்னொரு கொடுமையுடன் ஒப்பிட முடியாது. ஆனால் படுகொலைகளை புரிந்தவர்கள் அதனை பொறுப்பு ஏற்பதிலும் அதற்கான நீதியை வழங்குவதிலும் இருந்து தப்பிக்கொள்ள முடியாது.
இலங்கை அரசு தமிழ் மக்களை வரலாறு முழுவதும் படுகொலை செய்திருக்கிறது. இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்பவர்கள்கூட தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மாத்திரம் ஏற்றுக்கொண்டது கிடையாது. இதன் உச்ச கட்டமாக முள்ளி வாய்க்காலில் ஈழத் தமிழ் மக்கள் லட்ச கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலையின் தாக்கத்திலிருந்து ஈழம் விடுபட முடியாமல் தகிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களும் போர் கொல்லப்பட்டவர்களும் பொருளாதாரத்தை இழந்தவர்களுமாக ஈழம் காணப்படுகின்றது. ஒரு இனப்படுகொலை இப்படித்தான் அந்த நிலத்தை முற்றிலுமாக அழித்து கலைத்துப் போடுகின்றது.
காலத்தை கடத்துவதன் மூலமும் சர்வதேச ரீதியாக காய்களை நகர்த்துவதன் மூலமும் இனப்படுகொலை குற்றத்திலிருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணக்கூடாது. ஒரு இனப்படுகொலையின் தாக்கம் ஒரு சில வருடங்களில் நீங்கும் விடயமல்ல. ஒரு படுகொலையை புரிந்துவிட்டு அதற்கு பொறுப்புக்கூறவும் அதற்கான நீதியை வழங்குவதிலிருந்தும் எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடயத்தில் இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும், நீதியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆயிரம் வருடங்களைக் கடந்தாலும் நீங்கிவிடாது என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்