கட்டலோனிய லோனியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நேரடி ஆட்சி நடத்தப்பட வேண்டுமென ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. ஸ்பெய்னின் ஒர் பிராந்தியமான கட்டலோனியா சுதந்திரப் பிரகடனம் செய்துள்ளதனை அடுத்து இந்த அறிவிப்பை ஸ்பெயின் வெளியிட்டுள்ளது.
ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் கட்டலோனிய பாராளுமன்றில் சுதந்திரப் பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
சுதந்திரப் பிரகடனம் குறித்த பாராளுமன்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் இந்தப் வாக்கெடுப்பினை பகிஸ்கரித்திருந்தனர்.
இந்தநிலையில் ஸ்பெய்னிலிருந்து கட்டலோனியா பிரிந்து தனிநாடாகும் அங்கீகாரத்தை அறிவித்த சிலமணி நேரத்தில், கட்டலோனிய நாடாளுமன்றத்தைக் கலைத்து அங்கு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் வெளியிட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட கட்டலோனியாவின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பில் 2.3 மில்லியன் மக்கள் கலந்துகொண்டதுடன் தனிநாட்டு பிரகடனத்துக்கு ஆதரவு தெரிவித்து 90 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர்.
இதனை அடுத்து, கட்டலோனிய சுதந்திரப் பிரகடனத்துக்கான ஒப்பந்தத்தில் கட்டலோனிய தலைவர்கள் கையொப்பமிட்டபோதிலும், அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.