பிரித்தானியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2002-ம் ஆண்டு வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் முழங்காலை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதற்காக இவர் அண்மையில் மன்னிப்பும் கேட்டு இருந்தார். எனினும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறாக நடந்துகொள்வதாகவும், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பில் விரைவாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரதமர் தெரசா மே அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மைக்கேல் ஃபாலன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன், ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி உள்ளார்.
அதில், ‘சமீபகாலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. எனது கடந்த கால நடத்தை மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் பல குற்றச்சாட்டுக்கள் தவறானவை. ஆனால், ராணுவத்துக்கு தேவையான உயர்ந்த தரநிலைக்கு கீழ் எனது கடந்த கால செயல்பாடு இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். எனவே, என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தன் பெண் உதவியாளரிடம் அதிர்வு ஏற்படுத்தக்கூடிய 2 செக்ஸ் பொம்மை வாங்கி வரும்படி கூறியதாக பிரித்தானிய அமைச்சர் மந்திரி மார்க் கார்னியர் ஒப்பு கொண்டுள்ளார். எனினும் “நான் செக்ஸ் பொம்மை வாங்க சொன்னதை செக்ஸ் தொல்லையாக கருத முடியாது. பயன்பாட்டுக்காக சாதனங்களை வாங்கி வர உதவியாளரிடம் சொல்வது சாதாரணமான விஷயம் தான். இதில் தவறாக நான் நடந்து கொண்டதாக கருதவில்லை” தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.