இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கிறது?
இந்த கேள்விக்கு கல்வி, சுகாதாரம், வறுமை, பாலியல் வன்செயலுக்கு எதிரான பாதுகாப்பு ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் ‘பிளான் இந்தியா’ தொண்டு அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி, முடிவுகளை அறிவித்துள்ளது. அதனை மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்:-
* பெண்கள் ஒட்டுமொத்த பாதுகாப்பில் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ள மாநிலம், குட்டி மாநிலமான கோவா. இந்த மாநிலத்துக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 0.656. தேசிய சராசரி அளவான 0.5314-ஐ இது மிஞ்சி விட்டது.
* இரண்டாவது இடத்தை கேரளா பெற்றிருக்கிறது.
* மூன்றாவது, நான்காவது, ஐந்தாம் இடங்களும் குட்டி மாநிலங்களான மிசோரம், சிக்கிம், மணிப்பூர் மாநிலங்கள் பெற்றுள்ளன.
* முதல் 10 இடங்களுக்குள் இமாசல பிரதேசம் (6), கர்நாடகம் (7), பஞ்சாப் (8), மராட்டியம் (9), உத்தரகாண்ட் (10) ஆகிய மாநிலங்கள் வந்துள்ளன.
* கடைசி இடம், பீகார் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. இந்த மாநிலத்துக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 0.410
* டெல்லிக்கு 28-வது இடம் கிடைத்து இருக்கிறது. இந்த மாநிலத்துக்கு 0.436 புள்ளிகள் கிடைத்து இருக்கிறது.
* இந்த பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 11-வது இடமே கிடைத்துள்ளது. இதற்கான புள்ளிகள் 0.57324. இங்கு 15.7 சதவீத பெண்களுக்கு, அவர்கள் சட்டப்பூர்வ திருமண வயதை (18) அடைவதற்கு முன்னர் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.
* தமிழ்நாட்டில் பிறந்த ஒரு மணி நேரத்தில் 55.9 சதவீத குழந்தைகளுக்குத்தான் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.
* பாலியல் வன்செயலுக்கு எதிரான பெண்குழந்தைகள் பாதுகாப்பு என்ற ஒரே அம்சத்தில் தமிழ்நாட்டுக்கு 12-வது இடமும், பெண் கல்வியில் 22-வது இடமும் கிடைத்துள்ளது.
* பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்செயல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களில் 99.6 சதவீதம் பேர், தங்களுக்கு நன்றாக தெரிந்த நபர்தான் அந்த குற்றத்தை செய்ததாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.