ஒரே நாளில் 30.செ.மீ அளவு கனமழை பெய்ததால் சென்னை முழுதும் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளைச் சூழ்ந்து வெள்ளம் காணப்படுவதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று மாலை ஆரம்பித்த கனமழை விடிய விடிய விடாமல் பெய்தததால் சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விடாது பெய்த மழை காரணமாக வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதனால் போக்குவரத்து முடங்கியது.
அத்துடன் சென்னையின் 20க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் வெள்ள நீர் சூழ்ந்ததால் எங்கும் வாகனங்கள் செல்ல முடியாமல் முடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.
அத்துடன் இரவு முழுதும் மழை பெய்ததால் பாதுகாப்பு கருதி மின்சாரமும் நிறுத்தப்பட்டதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியிருததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
சென்னையின் அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.