ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் உள்ளதா என்கிற மனுவை இன்றையதினம் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. தனி நபர் அடையாளத்திற்காக இந்திய மத்திய அரசால் ஆதார் திட்டம் 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் தனிநபர் விபரங்கள் சேகரிக்கப்படுவதற்கான ஒரு அடையாள எண்ணாகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்கட்சியான இருந்த போது அதனை எதிர்த்த பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் ஆகியவற்றைப் பெறவும், வங்கி கணக்கு, மொபைல் போன் எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது.
இந்தநிலையில் ஆதார் அட்டை மூலம் அரசு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுகிறது எனவும் பயோ மெட்ரிக் மூலம் பதியப்படும் தகவல்கள் திருடப்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்தும் இது தொடர்பில் தனிநபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். கடந்த 30ம் திகதி ஆதார் தொடர்பான வேறு ஒரு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தின அரசியல் சாசன அமர்வு நவம்பர் மாத இறுதி வாரத்தில் விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.
ஆதார் என்பது அரசின் சலுகைகளை எளிதில் பெற வகை செய்யும் ஒரு வசதி தான் என்றும், அதை இணைக்க அடுத்த வருடம் மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிமன்றம் வங்கி கணக்குகள், மொபைல் எண்களை ஆதாரோடு இணைக்கச் சொல்லி மக்களைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்நிலையில் , ஆதார் சட்டத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றிய விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் தொடங்க உள்ளது.