பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாக கூறும் 4 லட்சம் தொழில் வாய்ப்புகள் பற்றிய முழு விபரம் வெளியிட முடியுமா என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.ஆனால் 4 லட்சம் பேருக்கு தொழில் வழங்கியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.இந்த தொழில் வாய்ப்புகள் நாம் அறிந்தவரை இலங்கையர்களுக்கு வழங்கப்படவில்லை.பிரதமர் தொடர்ந்து இதனை கூறுவதாக இருந்தால் அதனை அவர் நிரூபிக்க வேண்டும் என நாமல் தெரிவித்துள்ளார்.
தற்போதய மத்திய வங்கி ஆளுனரின் அறிக்கை படி இலங்கையில் கடந்த வருடம் சுமார் 4 லட்சத்து 70 ஆயிரம் தொழில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பத்திரிகைகளில் தற்போது விளம்பரம் செய்யப்படுவதை காணமுடிகிறது. குறித்த விளம்பரங்களில் இந்த நாட்டை கட்டியெழுப்ப , தொழில் நிர்மாணம் செய்ய ஐக்கிய தேசிய கட்சியியால் மட்டுமே முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சுதந்திர கட்சி கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளே முன்னெடுக்கப்படுகிறது.நாட்டின் தேசிய சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூட அரச நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்றார் ஆனால் அவை 10 வருடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.அதனால் தான் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கன் , ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனக்களை அரசமயமாக்க முடிந்தது. ஆனால் தற்போது நாட்டின் சொத்துக்கள் 99 அல்லது 40 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.