150
கிளிநொச்சி பூநகரி தெற்கு பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி வங்கி முகாமையாளர் ஒருவரின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளால் பயனாளிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சமூர்த்தி வங்கி முகாமையாளர் தனது விருப்பபடி மக்களின் நலன்களுக்கப்பால் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும், பல சந்தர்ப்பங்களில் நடைமுறைகளுக்கு மாறாக சமூர்த்தி செயற்பாடுகளில் ஈடுப்படுவதாகவும் தெரிவிக்கும் பயனாளிகளான பொதுமக்கள் இது குறித்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது எவ்வித பயனும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனா்.
அன்மையில் குறித்த முகாமையாளர் கடமையாற்றும் சமூர்த்தி வங்கிக்கு பல கிலோ மீற்றர்கள் இருந்து சமூர்த்தி பயனாளிகள் கை குழந்தைகளுடனும், மற்றும் வயோதிபர்களும் சமூர்த்தி கொடுப்பனவை பெறுவதற்கு சென்ற போது சில மணி நேரம் காத்திருக்க வைத்திருந்து விட்டு பணம் இல்லை எனத் தெரிவித்து வங்கி வளாகத்திலிருந்து வெளியே செல்லும் பயனாளிகளை அதிகார தொனியில் வெளியேற்றியுள்ளாா்.
இதன் பின்னர் வெளியேறி பயனாளிகள் நீண்ட நேரமாக வீதியில் கைகுழந்தைகளுடன் காத்திருந்த பாிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சில சமூர்த்தி பயனாளிகள் வருவதற்கு மாத்திரமே பேரூந்துக்கு பணம் கொண்டு வந்தவா்கள் திரும்பிச் செல்வதற்கு பணம் இன்றி பலரிடம் கடனாக பணம் கேட்டு நின்ற நிலைமையும் நடந்துள்ளது. தொடர்ச்சியாக குறித்த வங்கி முகாமையாளர் தான் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு கை குழந்தைகளுடன் வரும் பெண்களின் நிலைமையை புரிந்துகொள்ளாது மனிதாபிமானமற்று நடந்துகொள்வது பிரதேச மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சமூர்த்தி வங்கி முகாமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பிலிருந்தும் கடிதம் அனுப்பட்டும் மாவட்ட மட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கும் பிரதேச சமூர்த்தி பயனாளிகள் சமூர்த்தி நடவடிக்கைகள் சீரான முறையில் இடம் பெறவேண்டுமானால் குறித்த வங்கி முகாமையாளரை இடமாற்றம் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Spread the love