ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ அமைப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு, 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கோரி தமிழக அரசுக்கு ஆணை அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்துடுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக் கட்டு நடைபெறாத சூழல் நிலவி வந்தது. இந்த தடைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் ஜல்லிக் கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந்திகதி அவசர சட்டம் பிறப்பித்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக் கட்டு நடைபெற்றது.
இந்த நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் பல்வேறு விலங்கு நல அமைப்புகள் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு எதிராக பிறப்பித்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி வழங்கியதோடு, தமிழக அரசு பிறப்பித்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. மேலும் இடைக்கால மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அந்த மனுக்களை ரிட் மனுக்களாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி பீட்டா அமைப்பினர் உச்ச நீதிமன்றில் கடந்த ஜூலை மாதம் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், தமிழக அரசின் அவசர சட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் காளைகள் மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்தப்பட்டதாகவும், சில இடங்களில் மனிதர்கள் காயம் அடைந்ததாகவும், சில இடங்களில் மரணங்கள் ஏற்பட்டதாகவும், எனவே தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் நித்யா ராமகிருஷ்ணன் ஆஜர் ஆனார்.
விசாரணை தொடங்கியதும் இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி, தமிழக அரசுக்கு ஆணை அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.