169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கு கிழக்கு நீதிமன்றங்களை இரண்டாம் தர நீதிமன்றங்களாக தொடர்ந்து வரும் அரசாங்கங்களும் , சட்டமா அதிபர் திணைக்களமும் பார்க்கின்றன. அந்த நிலைமை மாறவேண்டும். அந்த நிலைமை இனியும் நீடிக்க கூடாது என சட்டத்தரணி கு.குருபரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை , காணமால் ஆக்கபப்ட்டவர்கள் , அரசியல் கைதிகளின் வழக்குகள் எங்களுடைய மண்ணிலே நடக்க விடாது வேறு நீதிமன்றுக்கு மாற்றுவது மிக மனவருத்தத்திற்கு உடைய விடயம். எங்களுடைய நீதிமன்றங்களை இரண்டாம் தரமாக பார்க்கும் நிலையை உணர்கின்றோம். என சட்டத்தரணி தே.சுபாஜினி தெரிவித்துள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி இராணுவ சுற்றி வளைப்பில் கைது செய்யபப்ட்ட 24 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களின் 12 பேர் சார்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பில் வழக்கினை தாக்கல் செய்த சட்டத்தரணிகளில் ஒருவரான கு.குருபரன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் , கடந்த 1996ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறுவன் புலவை சேர்ந்த 24 இளைஞர்கள் இராணுவ சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு நாவற்குழி மில் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு உள்ளனர்.
2002 ஆம் ஆண்டு வழக்கு தாக்கல்.
அது தொடர்பில் 12 பேர் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது அதில் 09 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் நீதிமன்றினால் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட்டது.
அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு வழக்கு மாற்றம்.
அதனை தொடர்ந்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு , நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் முடிவுறுத்தப்பட்ட பின்னர் , அந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி உட்பட இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்ட நிலையில் , யாழ்.மேல் நீதிமன்றுக்கு மீள பரப்படுத்தப்பட்ட பின்னர் , இந்த வழக்கு யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்கு அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
14 வருடமாக தகவல் இல்லை.
கடந்த 2003ஆம் ஆண்டு அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு வழக்கு மாற்றம் செய்த பின்னர் கடந்த 14 வருட காலமாக இந்த வழக்குக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தகவலும் தெரியாது. அதனால் நேற்றைய தினம் வியாழகிழமை குறித்த வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
Spread the love