ஊடக அறிக்கை
26 ஆண்டுகளாக கனேடிய தமிழ் வர்த்தக முயற்சியாளர்களின் முகமாக கருதப்படும் கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் அதன் தலைமைத்துவதத்திற்கு பெண் ஒரு வரை முதல் தடவையாக தெரிவு செய்துள்ளது.
கடந்த 28ம் திகதி ஜே.சீ விருந்தினர் மண்டபத்தில் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலின் முடிவில் கனடாவில் கடந்த பல வருடங்களாக சட்டத்தரணியாக பணியாற்றி வருபவரும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் நிர்வாக சபையில் பல்வேறு நிலைகளில் பல வருடங்கள் இயங்கிய அனுபவம் கொண்டவருமான திருமதி.டிலானி குணராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டிலானி குணராஜா தலைமையிலான புதிய நிர்வாக சபையில் பின்வரும் நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவாகியுள்ளனர்.
திரு.கஜன் மகான் – நிறைவேற்று உப தலைவர்
திரு.குபேஷ் நவரட்ணம் – உப தலைவர் – உள்ளக விவகாரங்கள்
திரு.விநாயகமூர்த்தி தேவதாஸ் – உப தலைவர் நிதி முகாமைத்துவம்
திரு.வேணு புவிராசன் – உப தலைவர் – சமூக விவகாரங்கள்
திரு.ரமணன் சந்திரசேகரமூர்த்தி – உப தலைவர் – உறுப்பினர்
திரு.ராம் கிரிஷ் – பணிப்பாளர்.
திரு.தீபன் ராஜ் – பணிப்பாளர்.
தேர்தல் வாக்களிப்பின் மூலம் பணிப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த திரு.தீபன் ராஜேந்திரன் தனது பதவியில் இருந்து விலகுவதாக நிர்வாக சபைக்கு அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாக சபையானது கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் பாரம்பரியங்களை பேணும் வகையிலான செயல் திட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளை புதிய பல திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
கனடாவில் வாழும் தமிழர்களின் அடையாளமாக வர்த்தக சம்மேளனம் திகழ வேண்டும் என்பதிலும் குறிப்பாக தமிழ் அடையாளங்களை தமிழர்கள் தொலைத்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் பணிப்பாளர் சபை உறுதி கொண்டுள்ளது.
கனடாவில் உள்ள தமிழ் வர்த்தக முயற்சியாளர்களுக்கு வர்த்தக சம்மேளனம் தொடர்பில் உள்ள எதிர்பார்ப்புகளை கண்டறிந்து அவற்றை பூர்த்தி செய்யதற்கான செயல்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் வர்த்தக சம்மேளனத்தின் மீதான வர்த்தக முயற்சியாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதோடு புதிய அங்கத்தவர்களையும் இணைத்துக் கொண்டு வர்த்தக சம்மேளனத்ததை பலம் மிக்க ஒரு தமிழர் அமைப்பாக வளர்த்தெடுக்க முடியும் என்று நிர்வாக சபை கருதுகின்றது.
கனேடிய பொருளாதாரத்திற்கு அதிகளவான பங்களிப்பை வழங்கி வரும் ஒரு இனத்தின் பிரதிநிதிகளாக எமது வர்த்தக முயற்சியாளர்களுக்குரிய வரப்பிரசாதங்களை தேசிய , மாகாண, மற்றும்; நகர சபை மட்டங்களில் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அதேபோன்று வர்த்தக சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கான வரப்பிரசாதங்கள் அவர்களின் வர்த்தக முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கான உதவிகள் பல்வேறு மட்டங்களிலும் தொடர்புகளை விரிவு படுத்தும் செயல் திட்டங்களையும் வர்த்தக சம்மேளனம் முன்னெடுக்கவுள்ளது.
தாயகத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கும் கனேடிய தொழில் முனைவோருக்கும் இடையிலான பாலமாக கனேடிய வர்த்தக சம்மேளனம் செயல்படுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் மூலமாக தமிழர்களின் தாயகப் பகுதிகளில் புதிய தொழில் முயற்சிகளை கனேடிய தமிழ் தொழில் முனைவோரின் பங்குபற்றுதலோடு உருவாக்கவும் அதன் மூலமாக பெறப்படும் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளை கனேடிய மற்றும் சர்வதேச நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல் திட்டங்களையும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. இதன் மூலம் தாயகத்தில் வாழும் எமது மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கு புலம்பெயர் சமூகத்தின் கணிசமான பங்களிப்பினை வழங்க முடியும் என்றும் வர்த்தக சம்மேளனம் கருதுகின்றது.
வெறுமனே நிகழ்வுகளை நடத்தும் ஒரு அமைப்பாக வர்த்தக சம்மேளனம் வரையறுக்கப்படும் நிலையை மாற்றி முன்னேற்றகரமான திட்டங்களின் மூலமாக கனேடிய வர்த்தக சமூகத்திற்கு காத்திரமான பங்களிப்பினை வழங்கும் ஒரு அமைப்பாக கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தை முன்னிறுத்துவதற்குரிய சகல முயற்சிகளையும் இந்த நிர்வாக சபை மேற்கொள்ளும்.
கனேடிய தமிழர் சர்த்தக சம்மேளனத்தின் இந்த முயற்சிகளுக்கு தமது பங்களிப்பை வழங்க விரும்பும் அனைத்து வர்த்தக முயற்சியாளர்களையும் தமது இணைந்து பயணிக்குமாறு வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.