166
மூன்று விடயங்கள் இன்றைய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டம், புதிய அரசியலமைப்பின் ஊடான அரசியல் தீர்வுக்கான விவாதம் மற்றும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவதற்காகத் திகதி குறிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகிய மூன்றுமே அந்த முக்கிய விடயங்களாகும்.
இந்த மூன்றும் தனித்தனி விடயங்கள். ஆயினும், இடைக்கால அறிக்கை மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பவற்றில் அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றது. இந்த நிலையில், இந்த இருகட்சி அரசாங்கம், தன்னை தொடர்ந்து பதவியில் தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு மறைமுக நிகழ்ச்சிநிரலை இந்த விடயங்களின் பின்னணியில் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
பொது எதிரணி உட்பட, மறுதரப்பில் உள்ள அரசியல் கட்சிகளையும், பொது மக்களையும் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் செயற்படவிடாமல் குழப்பியடித்து, அதன் ஊடாக அரசியல் ரீதியான நலன்களை அடைவதற்காக, வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கால கட்டத்தில் இந்த இரண்டு விடயங்களையும் அரசாங்கம் கையில் எடுத்திருப்பதை, ஓர் அரசியல் வியூகமாகவும் குறிப்பிடலாம்.
வரவ செலவுத் திட்டம்
வழமையான முக்கியத்துவம் கொண்ட ஒரு வரவு செலவுத் திட்டம் என்பதற்கும் அப்பால், இம்முறை கொண்டு வரப்படுகின்ற வரவு செலவுத் திட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளுடனான இலங்கையின் அயலுறவுக் கொள்கை, பொருளாதாரத்தின் அடித்தளத்தில் சுழல்கின்ற நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த மூன்றாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
வழமையான முக்கியத்துவம் கொண்ட ஒரு வரவு செலவுத் திட்டம் என்பதற்கும் அப்பால், இம்முறை கொண்டு வரப்படுகின்ற வரவு செலவுத் திட்டம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற முக்கிய நாடுகளுடனான இலங்கையின் அயலுறவுக் கொள்கையானது, பொருளாதாரத்தின் அடித்தளத்தில் சுழல்கின்ற நிலையில், இந்த மூன்றாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு வருட இறுதியில் போனஸ் வழங்குவது போன்று, வரவு செலவுத் திட்ட காலத்தில், மக்களுக்கு அரசாங்கம் சிறு சிறு சலுகைகளை வழங்குவது உண்டு. அந்த வகையில் சில உணவுப் பொருட்களுக்கான வரிக்குறைப்பை அரசாங்கம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு மற்றும் கருவாடு, தேங்காய் எண்ணெய், மரக்கறி எண்ணெய் என்பவற்றுக்கான விசேட வர்த்தக வரிகளே குறைக்கப்பட்டிருக்கின்றன. அதிகரித்துச் செல்கின்ற வாழ்க்கைச் செலவுக்கு ஈடு கொடுக்கத்தக்க வகையில் வருமான அதிகரிப்பின்றி நாட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற
நிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விலைக்குறைப்பானது, வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இந்த விலைக்குறைப்பானது, வாழ்க்கைச் செலவு சுமையில் பெரிய மாற்றம் எதனையும் கொண்டு வரப் போவதில்லை. ஆயினும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள சந்தர்ப்பத்தில், அரசாங்கம் காட்டியுள்ள விலைக்குறைப்பு என்ற கவர்ச்சியானது, தேர்தலை இலக்காகக் கொண்டிருக்கின்றது என்றே பலரும் கருதுகின்றார்கள்.
இந்த அறிவித்தல் பாமர மக்களைச் சென்றடைந்து, அதன் நன்மை என்ன என்பதை, அவர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கு முன்னதாக, பொது மக்கள் மீது சுமத்துகின்ற வரிச்சுமைகள் பற்றிய அறிவித்தலை நிதி அமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு செலவுத் திட்ட உரையில் முன்மொழிந்திருக்கி;ன்றார். அவற்றில் காபன் வரி என்ற புதிய வரி, கார்கள் மற்றும் பொது போக்குவரத்து சாதனங்களான பேருந்துகள் மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களுக்கும் நாளாந்த அடிப்படையில் அறவிடப்படும் என அவர் கூறியுள்ளார். இதுபோன்று பொதுமக்களை மறைமுகமாகப் பாதிக்கத்தக்க வேறு வகைகளிலான வரி அறவீடுகளுக்குரிய முன்மொழிவுகளும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கவனம் செலுத்தியுள்ள திட்டம்
கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்ற இந்த வரவு செலவுத் திட்டத்தை நீலத்தையும் பச்சையையும் உள்ளடக்கிய ஒரு திட்டமென அரசாங்கம் அழைக்கின்றது. சிறிலங்கா சுதந்திரக்கட்சி நீல நிறத்தைக் கொண்டது. ஐக்கிய தேசிய கட்சி பச்சை நிறத்தைக் கொண்டது. இந்த இரண்டு கட்சிகளினதும் கொடி நிறங்களான நீலமும், பச்சையும் கடல் மற்றும் விவசாயத் துறை சார்ந்த அபிவிருத்தியைக் குறியீடாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
கடல் வளத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தையும், நிலவளத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் உள்ளிட்ட பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் திட்டங்கள் தீட்டப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கின்றது. பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ள அரசாங்கம், அதில் இருந்து விடுபடுவதற்காகவே கடல் வள அபிவிருத்தியை முதன்மைப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.
.இலங்கையை சர்வதேச வர்த்தக சந்தைக்கான மையமாகக் கட்டியெழுப்புகின்ற பொருளாதாரத் திட்டத்தின் சாயல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் படிந்திருப்பதை நிதியமைச்சர் மங்கள சமரவீர கோடிகாட்டியிருக்கின்றார். எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் மேல் நடுத்தர வருமானமுள்ள நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் இடப்பட்டிருப்பதாகவும் நிதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அதேவேளை வடக்கு கிழக்கு பிரதேச மக்களின் வாழ்க்கை நலன்களில் கரிசனை கொண்ட திட்டங்களுக்கும் பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்த திட்டங்களுக்கும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடமளிக்கப்பட்டிருப்பது கவனிப்புக்குரியதாகும். மொத்தத்தில் நெருக்கடிகளையும் நிவாரணங்களையும் உள்ளடக்கியுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் அரசியல் ரீதியான சூடான விவாதங்களை எதிர்கொள்ள நேரிடும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
அதேவேளை, வரவு செலவுத் திட்ட விவாதங்களைச் சூடேற்றுவதற்கு புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆகிய சமகால அரசியல் விடயங்களையும் அரசியல்வாதிகள் பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இடைக்கால அறிக்கையும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலும் உயிரோட்டமுள்ள சமகால அரசியல் விடயங்களாகவும், விவகாரங்களாகவும் அமைந்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.
குழப்பகரமான நிலைமை
இடைக்கால அறிக்கையானது, அரசியல் தீர்வுக்கு அடிப்படையான ஆட்சி முறை, மதங்களுக்கான உரிமை, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. அந்த அறிக்கை குறித்து அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதத்தில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத்தக்க வகையில் ஆரோக்கியமான அரசியல் நிலைப்பாடுகளை அந்த கருத்துக்கள் கொண்டிருக்கவில்லை. அத்தகைய கருத்துக்களில் உடன்பாடு எட்டத்தக்க வகையிலும் அந்த விவாதம் அமையவில்லை. ஆளாளுக்கு நேர் முரணான நிலைப்பாடுகளை வலியுறுத்துவதற்கான ஒரு பிரசார களமாகவே அந்த விவாதம் பயன்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளினதும் பங்களிப்புடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகவே நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. முப்பது வருடங்களாகத் தொடர்ந்த ஒரு மோசமான யுத்தம் மூள்வதற்குக் காரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான அரசியல் தீர்வை உள்ளடக்கிய இந்த அரசியலமைப்பு குறித்து ஒரு சில தினங்களே அந்த சபையில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த விவாதம் நடைபெற்றபோது, இடைக்கால அறிக்கை குறித்து நாட்டில் உள்ள மதத்தலைவர்கள், மற்றும் புத்திஜீவிகளுக்கு உரிய விளக்கமளிக்கப்படும் என்றும், சர்வகட்சி மாநாடும் நடத்தப்படும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார். அது மட்டுமல்ல. கைத்தொலைபேசி வழியான (எஸ்.எம்.எஸ்) குறுந்தகவல்களின் ஊடாக பொதுமக்களுடைய கருத்துக்களும் திரட்டப்படும் என்றும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு உட்பட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய அரசியலமைப்பை எவ்வாறு உருவாக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே அரசாங்கம் கருத்தறியும் குழுக்களின் ஊடாக மக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, அந்தக் கருத்துக்களுக்கு என்ன நடந்தது, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மீண்டும் கருத்துக்களைப் பெறுவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன.
இந்த நிலையில் இடைக்கால அறிக்கை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் சித்திரை மாதத்தில் அல்லது அதன் பின்னர் முன்னெடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியிருக்கின்றது. ஆயினும் இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுக்கான முயற்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி அமையப் போகின்றது என்பதில்; தெளிவானதொரு நிலைப்பாட்டைக் காண முடியவில்லை. குழப்பகரமான நிலையே காணப்படுகின்றது.
நாட்டின் ஆட்சி முறை மற்றும் அதிகாரப் பரவலாக்கல் என்ற விடயங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியினரான சிங்களத் தரப்பில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றது. அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்த இடைக்கால அறிக்கையை வரவேற்று, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளின் அடிப்படையான விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்;கியிருக்கின்றது.
இது, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அளித்துள்ள தேர்தல் ஆணைக்கு முரணான வகையில், தமிழ்த்தேசிய கூட்டமை;பபின் தலைமை – குறிப்பாக தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை என குறிப்பிட்டு, கூட்டமைப்புக்குள்ளேயே கடும் போக்கிலான மாற்றுக் கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், இடைக்கால அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி ஈபிஆர்எல்எவ் கட்சி அதனை நிராகரித்திருக்கின்றது.
அதேவேளை, ஈபிஆர்எல்எவ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் அமைப்புக்களும் இணைந்து அந்த எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், தேர்தலில் கூட்டமைப்பு பிளவுபட்ட நிலையில் களம் இறங்க வேண்டிய அரசியல் சூழலும் உருவாகியிருக்கின்றது, இதனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுக்கமான ஓர் அணியாக அரசியலில் தொடர முடியுமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கின்றது.
எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையைக் கடந்து எழுந்துள்ள தமிழர் தரப்பிலான எதிர்ப்பு மற்றும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணி சார்ந்த சிஙகளத் தரப்பு ஆகிய இருமுனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வரைபைத் தயாரிக்க வேண்டிய பாரிய பொறுப்பில் அரசாங்கம் சிக்கியிருக்கின்றது.
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலானது, பல்வேறு அரசியல் வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டதாக, நீண்ட தாமதத்தின் பின்னர் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது. சில வேளைகளில், திட்டமிட்டபடி, இந்தத் தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறாமல் பிறிதொரு திகதிக்குப் பின்போடப்படவும்கூடும். அவ்வாறு நிகழ்ந்தால் அது ஆச்சரியத்துக்குரியதல்ல.
ஆயினும், மிகவும் முக்கியமானதோர் அரசியல் சூழலிலேயே இந்தத் தேர்தலை நடத்துவதற்கு, அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எதிரும் புதிருமான கொள்கை நிலையிலான விவாதங்களை உயிரோட்டமாகக் கொண்டுள்ள, இந்த அரசியல் சூழலானது, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை அடிமட்ட அபிவிருத்தி சார்ந்த தேர்தல் என்ற நிலையைக் கடந்து, இதனை முழுக்க முழுக்க அரசியல் மயப்பட்டதாக மாற்றுவதற்கு வழிதிறந்துள்ளது.
அடுத்த கட்ட தேசிய அரசியல் நகர்வுகளில், முக்கியமான கொள்கை வழி அரசியல் தீர்மானங்களுக்கான ஆரம்பப் புள்ளியாகவும் இந்தத் தேர்தல் அமையப் போகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் அடுத்த கட்ட இருப்பு என்ன என்பதைக் கட்டியம் கூறத்தக்க பெறுபேறுகளை பிரசவிக்கப் போகின்ற முக்கியமான களமாகவும் இந்தத் தேர்தல் அமையப்போகின்றது. அதற்கான அறிகுறிகள் அரசியல் களத்தில் மிகத் தெளிவாகத் தோன்றியிருக்கின்றன.
பல்வேறு அரசியல் பின்னணிகளில், பல முனைகளிலான அரசியல் நெருக்குதல்கள் இருந்தபோதிலும், இடைக்கால அறிக்கை தொடர்பில் நாடு தழுவிய அளவிலான விவாதத்தையும், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலையும் இந்த கால கட்டத்தில் இடம்பெறாமல் தாமதித்திருக்கலாம். அல்லது முந்தியோ பிந்தியோ இடம்பெறுகின்ற வகையில் இவற்றை அரசாங்கம் திட்டமிட்டிருந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.
வரவு செலவுத் திட்டமானது வருடந்தோறும் நவம்பர் மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியது. அந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றங்களைச் செய்ய முடியாது. அது கடினமான காரியம். ஆயினும், சிக்கல்கள் நிறைந்த விடயமாகிய அரசியல் தீர்வுக்கான முயற்சி மற்றும், ஆட்சிப் போக்கை நிர்ணயிக்கத் தக்க வல்லமையைக் கொண்டதாக அமைந்துள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பவற்றை அரசாங்கம் இந்த வரவு செலவுத்திட்ட காலப்பகுதியில் திட்டமிட்ட வகையில் முன்னெடுத்துள்ளதாகவே ஆய்வாளர்கள் கருதுகி;ன்றார்கள். .
ஒத்த நிலைப்பாடு……..?
அரசியல் தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு வலுச் சேர்த்து, நாட்டு மக்களின் ஆணையைப் பெறுவதற்கான முயற்சிகள் இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் முதன்மைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த முயற்சியானது, யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கழிந்த பின்னர், ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் புறந்தள்ளச் செய்யும். அத்துடன் ஒற்றையாட்சியின் கீழ் முன்னர் இருந்ததிலும் பார்க்க மோசமான நெருக்கடிளைக் கொண்டதோர் அரசியல் நிலைப்பாட்டை உருவாக்குவதற்குமே வழிவகுக்கும் என்றும் நிச்சயமாக நம்பலாம்.
ஏனெனில் வடக்கு கிழக்கு இணைக்கப்படமாட்டாது. பௌத்தத்திற்கே முதலிடம். ஒற்றையாட்சி முறையில் மாற்றமில்லை. இவற்றுக்கு எந்த வகையிலும் பாதகம் ஏற்படாத வகையிலேயே, ஒற்றையாட்சியின் கீழ் உச்சகட்டத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினரும், இதே கொள்கையைத்தான் கொண்டிருக்கின்றார்கள்.
ஆக, தமிழ் மக்கள் விரும்புகின்ற வகையில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி முறையிலான ஆட்சி, பகிரப்பட்ட இறையாண்மையுடன் கூடிய அதிகாரப்பகிர்வு என்பன ஏற்கனவே எட்டாக்கனியாக மாறியிருக்கின்றன. ஏனெனில் சிங்களத் தரப்பினர் கொண்டுள்ள நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்த விடயங்களில் தேவையான அளவில் விட்டுக் கொடுப்பை ஏற்கனவே செய்திருக்கின்றது.
கருத்துக் கணிப்பா……?
எனவே, அரசாங்கத் தரப்பினரும், பொது எதிரணியினரும், அரசியல் தீர்வுக்கான தமது நிலைப்பாட்டுக்குரிய ஆணையை இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் சிங்கள மக்களிடம் இருந்து பெறுவார்கள். அதற்கான கருத்துக் கணிப்பாகவே இந்தத் தேர்தல் அமையும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை – தமிழரசுக்கட்சியானது, அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ள தனது நிலைப்பாட்டுக்கான ஆணையை தமிழ் மக்களிடம் இருந்து இந்தத் தேர்தலில் பெறுவதற்கு முயற்சிப்பார்கள் என்பதிலும் ஐயமில்லை. எனவே, இதுவும்கூட தமிழ் மக்கள் மத்தியிலான ஒரு கருத்துக் கணிப்பு நடவடிக்கை என்றே கருத வேண்டியிருக்கின்றது.
ஏற்கனவே உள்ளுராட்சி சபைகளுக்கான வேட்பாளர்களைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கைகளுக்கான கிராமப்புறச் சந்திப்புக்களில் தமிழரசுக் கட்சி இடைக்கால அறிக்கை தொடர்பில் தான் எடுத்துள்ள முடிவுகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றது. இதனால், இந்தச் சந்திப்புக்கள் பல இடங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டாலும், பல சந்திப்புக்கள் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, சிங்கள மக்களிலும் பார்க்க, நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் என்பது தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பற்றிய தலையெழுத்தை நிர்ணயிக்கின்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. அந்த வகையில் இராஜதந்திர ரீதியில் திட்டமிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றே கருத வேண்டியிருக்கின்றது.
Spread the love