.
எண்ணில் நினைவெல்லாம்
இன்னுமுன் சிரித்த முகம்.
பின்னே உன் பாதக் கொலுசின்
பாடல் மட்டும் ஒலிக்கவில்லை.
.
வாழ்வே பொய் என்பவளின்
மரணம் எங்கண் மெய்யாகும்.
முந்திவிட்டாய் போய்வா
விடுதலையாம் சிறகசைத்து
.
பெண்ணின் கசந்த விதியே
வசந்தத்தும் இலையுதிரவைக்கும்
மங்கையரின் பாழ் விதியே
காடெரிந்த நாட்களிலும் தீபுந்து
குட்டிகட்க்காய் இரைதேடும்
அகதிப் பெண் புலிஒன்றை
கண்ணாடி கூண்டுள் வீழ்த்திவிட்டாய்.
வாழிய வல் விதியே
,
தங்கச்சி என் நினைவில் இருக்கும்
உன் முதல் வார்த்தை புன்சிரிப்பு.
என் காதுள் உறைந்த இறுதி வார்த்தை
உன் இயலாத பெண்ணுக்கான
அழுகையாய் இருந்தது,
எங்கும் மனிதர்கள் இருக்கின்றோம்.
இருக்கிறது தமிழ்நாடு.
எதற்கும் இனிமேல் அழாமல் போய்வாடி?
.
இதோ தாய்மண்ணால் வனைந்து
நீ உடுத்த ஆடை கிடக்கிறது.
கலங்காதே
மின்னில் எரித்து
வங்கக் கடலில் எறிந்தால்
ஈழகரை சேர்ந்துவிடும்.
,
போய்வா.