இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கிருஷ்ணா நதியில் தினந்தோறும் மாலையில் நதிக்கு பவித்ர ஹாரத்தி காண்பிக்கப்படுகிறது. நேற்று மாலை குறித்த நிகழ்வினை காண்பதற்காக சென்ற சுற்றுலாப் பயணிகள் படகே இவ்வாறு கவிழ்ந்து விபத்துள்ளாகியுள்ளது.
குறித்த படகில் 40 பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில் மீட்புபணிகள் தொடர்ந்தும் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் அதில் 6 பேர் பெண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
கவிழ்ந்த படகு ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது எனவும் அந்த படகிற்கு எந்த அங்கீகாரமும் இல்லை எனவும் அது சட்டத்திற்கு புறம்பாக சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றுள்ளது என்வும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேவேளை பயணிகள் அனைவரும் ஒரு பக்கமாக படகில் அமர்ந்து இருந்தனர் எனவும் அதுதான் விபத்திற்கு காரணம் எனவும் விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.