குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது. மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை கூறி கொலை அச்சறுத்தல் விடுத்து இருந்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை போலீசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர், குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது போலீசார் குறித்த விசாரணை இன்னமும் முடிவடையவில்லை என மன்றில் தெரிவித்தனர்.
அவ்வேளை சந்தேகநபர் எதிரிக்கூண்டில் நின்று தான் செய்யாத குற்றத்திற்காக தொடர்ந்தும் சிறையில் இருக்கிறேன். என் பிள்ளைகளை கூட பார்க்க முடியவில்லை. சிறைக்குள் தொடர்ந்து இருப்பதனால் பைத்தியம் பிடிப்பது போன்று உள்ளது என உணர்ச்சி வசப்பட்டு பேசினார். அதன்போது நீதவான் , வழக்கு தவணைக்கு வந்து போகும் போது அமைதியாக இருக்குமாறு கூறிய போது அதனை கேட்காது பேசியதாலையே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது மன்றில் இவ்வாறு உணர்ச்சி வசப்பட்டு பேசி , நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து விசாரணைகள் முன்னெடுக்க வைக்க வேண்டாம் என எச்சரித்தார். அதனை தொடர்ந்து சந்தேகபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அன்றைய திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்