ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு விருப்பம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என அவரின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுள்ள உச்ச நீதிமன்றம், பேரறிவாளனை தண்டனையில் இருந்து விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான கே.டி.தோமஸ் கடந்த ஒக்டோபர் 18-ம் திகதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், தாங்களும், தங்கள் மகன் ராகுல், மகள் பிரியங்காவும் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைக்கும் பட்சத்தில் நீண்ட காலம் சிறையில் கழித்துவிட்ட சிறைவாசிகளை மத்திய அரசு விடுதலை செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஒரு தாயாக சோனியாகாந்திக்கு தனது உணர்வுகள் புரியும் எனவும், தன் மகனின் விடுதலைக்கு உதவ வேண்டும் எனவும் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.