பாபர் மசூதி விவகாரத்தில் தலையிட ஷியா வக்பு வாரியத்துக்கு உரிமை இல்லை என அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. லக்னோவில் மசூதியும், அயோத்தியில் கோயிலும் கட்டலாம் என ஷியா வக்பு வாரியம் தெரிவித்ததனைத் தொடர்ந்து இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயில் – பாபர் மசூதி பிரச்சினையில் வாழும்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மேற்கொண்டுள்ள சமரச முயற்சிக்கு உ.பி. ஷியா மத்திய வக்பு வாரியத்தின் தலைவரான வசீம் ரிஜ்வி. ஆதரவளித்து வருகிறார். இந்தநிலையில் லக்னோவில் நேற்று முன்தினம் பேசிய ரிஜ்வி, அயோத்தியில் ராமர் கோயிலும், லக்னோவில் பாபர் மசூதியும் கட்ட முஸ்லிம்கள் தயாராக இருப்பதாகவும் இது குறித்த சமரச உடன்படிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு முஸ்லிம்களில் ஷியா, சன்னி ஆகிய இரு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய ஒரு நிலையிலேயே அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் மேற்படி கண்டனத்தினை வெளியிட்டுள்ளது.. உச்ச நீதிமன்றத்தின் பாபர் மசூதி வழக்கில் ஷியா வக்பு வாரியத்தினருக்கு எந்த தொடர்பும் இல்லாதபோது அவர்கள் எப்படி சமரச உடன்படிக்கையை தாக்கல் செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.