இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா ரோந்து கப்பலை இலங்கை கடற்படைக்கு இலவசமாக வழங்குவதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1984-ம் ஆண்டு தயாராகி 1988-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பலானது சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றி கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றது. இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் கடல்சார் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையில் இலங்கை காட்டிவரும் ஈடுபாட்டுக்காக, அந்நாட்டு கடற்படையிடம் வருணா ரோந்து கப்பலை பரிசாக அளிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய அரசிடம் இலங்கை ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்திய கடலோர காவல்படையினரால் பயன்படுத்தப்பட்ட வருணா ரோந்து கப்பலை இலங்கை கடற்படை நன்கொடையாக பெற்றுக் கொள்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை.
இந்தநிலையிலேயே இலங்கைக்கு இலவசமாக ரோந்து கப்பலை அளிப்பதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தனது சொந்த நாட்டு மீனவர்கள் மீதே தாக்குதல் நடத்துவதற்கு இலங்கை கடற்படைக்கு இலவசமாக ரோந்து கப்பலை வழங்கும் மத்திய அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியது என அவர்கள் தரிவித்துள்ளனர்.