குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
வடக்கில் மேற்கொள்ள படும் ஆசிரிய இட மாற்றங்களால் குடும்பங்கள் சீர்குலைந்து போவதுடன் , குடும்பங்களுக்கு இடையில் பிரிவுகளும் ஏற்படுகின்றன என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 110ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஆசிரிய இடமாற்றங்களின் போது, கணவன் மனைவி பிரிந்து இருக்க கூடிய நிலைகள் ஏற்படுகின்றன. அதனால் குடும்பங்கள் சீர்குலைந்து போவதுடன் , குடும்பங்கள் பிரிந்து செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளன அது மட்டுமின்றி பிள்ளைபேறுகளிலும் வீழ்ச்சி காணப்படுகின்றது.
அண்மையில் வவுனியாவில் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வவுனியாவில் அறை ஒன்றினை வாடகைக்கு பெற்று அங்கு தனிமையில் தங்கி நின்றே பாடசாலை சென்று வந்தார். அவர் கர்ப்பிணியாக இருந்த கால பகுதியிலும் அவ்வாறே சென்று வந்தார்.
ஆசிரியை கர்ப்பிணியாக இருக்கின்றார் என்பதால் அவருக்கு இரண்டு வருட காலப்பகுதிக்கு யாழ்ப்பணத்தில் கடமையாற்றும் விதமாக மாற்றம் செய்ய கோரி இருந்தார். அவரது கோரிக்கையை கல்வி அமைச்சர , அமைச்சின் செயலாளர் ஆகியோர் ஏற்றுக்கொண்டு இடமாற்றம் வழங்க சம்மதித்தனர். ஆனால் , அதற்கு வவுனியா வலய பணிப்பாளர் சம்மதிக்க வில்லை.
அதனால் அந்த ஆசிரியைக்கு மாற்றம் கிடைக்கவில்லை பல மன அழுத்தத்தின் மத்தியில் தனிமையில் அறையில் இருந்தே பாடசாலை சென்று வந்தார் அந்த கர்ப்பிணி ஆசிரியை. எனவே இவை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். என தெரிவித்தார்.
அதன் போது கருத்து தெரிவித்த அவைத்தலைவர் கல்வி அமைச்சர் , அமைச்சின் செயலாளர் ஆகியோர் சம்மதம் தெரிவித்தும் ஒரு வலய பணிப்பாளர் மறுத்து இருக்கின்றார் என்றால் எங்கள் நிலை என்ன ? என தெரிவித்தார்.
அதன் போது கருத்து தெரிவித்த மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினர் பசுபதிபிள்ளை சட்டங்கள் மண்ணில் உள்ளது யார் அதனை கடைப்பிடிக்கின்றார்கள். எத்தனை பேர் சட்டத்தை மதிக்கின்றார்கள் தெரிவித்தார்.