ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி ஜி.சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கவுதம்சந்த் நிமானி, மகாவீர் சந்த், உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் இருந்து இவர்களை விடுவிக்க மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் உள்ளிட்டோர் 1.35 கோடி ரூபா பெற்று மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அதில் 60 லட்சம் ரூபாவினை அப்போது குறித்த வழக்கை விசாரித்த க்யூ பிரிவு எஸ்பியான ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரிடம் வழங்கியதாக அவர்கள் விசாரணையின்போது தெரிவித்தனர்.
இந்தநிலையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த மே மாதம் சம்பத்குமார் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதத்தில் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் நேற்று லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் 4 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். எனினும் நீதிபதி இந்த வழக்கை நவம்பர் 28-ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் , அன்று முதல் சாட்சி விசாரணை ஆரம்பமாகும் எனஅறிவித்துள்ளார்.