அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த 5-ந் தேதி அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் நாடெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும் போதே 2-வது கட்டமாக அங்கிருந்து 116 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதன்படி 116 இந்தியர்களுடன் அமெரிக்காவின் 2-வது ராணுவ விமானம் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் சென்றடைந்தது. கடும் கண்டனம் எழுந்தபோதிலும் இந்த முறையும் இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் 112 இந்தியர்களுடன் 3-வது அமெரிக்க விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி தெரிவித்தார். விமானத்தில் அரியானாவைச் சேர்ந்த 44 பேர், குஜராத்தை சேர்ந்த 33 பேர், பஞ்சாப்பை சேர்ந்த 31 பேர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 பேர், உத்தரகாண்ட் மற்றும் இமாசலபிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவர் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடியேற்றம் மற்றும் பின்னணி சோதனைக்கு பிறகு அனைவரும் அவரவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சாக்ஷி சாவ்னி செய்தியாளர்களிடம் கூறினார்.