Home இலங்கை தலதாமாளிகை மீதான குண்டுத் தாக்குதலுக்கு ஜே.வி.பி மன்னிப்புக்கோர வேண்டும்!

தலதாமாளிகை மீதான குண்டுத் தாக்குதலுக்கு ஜே.வி.பி மன்னிப்புக்கோர வேண்டும்!

by editorenglish

யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியதை போன்று தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்புக் கோர வேண்டும். 75 ஆண்டுகால  சாபத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும். 75 ஆண்டு கால அரசாங்கத்தை சாபம் என்று இனியும் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள். சாயம் வெளுத்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (19/2/2025) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தை பார்க்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  மூன்றாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார் என்றே தோன்றுகிறது. 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த வரவு  செலவுத் திட்டத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தில் யோசனைகளில் பாதகமான பல யோசனைகள்  வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியினர் கடந்த காலங்களில் 75  ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்தார்கள். ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அன்று சாபம் என்று குறிப்பிட்டதை தவறென்று தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கடந்த காலங்களில் ஜே.வி.பி யினர்  ஏலம் விட்ட பல கொள்கைகள் வரவு  செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அரசியல் தலைவர்களை மக்கள் விடுதலை முன்னணி வதைத்தது அவர்கள் இறந்ததும் அவர்களின் ஆத்மாக்களையும் விமர்சித்தது. இன்று அவர்களின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துகின்றீர்கள்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் இன்றும் விமர்சிக்கின்றீர்கள். நாட்டுக்காக சேவையாற்றியவர்களையும் காட்டிக் கொடுத்தீர்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  வரவு – செலவுத் திட்டத்தின் மீதான உரையில் யாழ். நூலகம் பற்றி குறிப்பிட்டிருந்தார். யாழ். பல்கலைக்கழகத்துக்குள் செல்லும் போது தமிழர்கள் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டுச் செல்வார்கள். யாழ். நூலகம் அரசியல் கட்சியின் ஒத்துழைப்புடன் தீ வைக்கப்பட்டது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ் நூலகம் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் எமது தாய் கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பின்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இதனையிட்டு நாங்கள் இன்றும் கவலையடைகிறோம். யாழ். நூலகம் தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

யாழ். நூலகம் பற்றி பேசிய ஜனாதிபதிக்கு மக்கள் விடுதலை முன்னணி அன்று தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியது நினைவுக்கு வரவில்லையா, மன்னிப்பு கேட்க தோன்றவில்லையா, யாழ் நூலகம் தீக்கிரையானது  தவறு. அதேபோன்று   தலதா மாளிகைக்கு குண்டுத்தாக்கியதற்கும் மன்னிப்பு கோருங்கள்.ஆகவே பிறருக்குப் போதனையளிக்க மக்கள் விடுதலை முன்னணிக்கு உரிமையில்லை.

75 ஆண்டுகால சாபத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியே பொறுப்புக் கூற வேண்டும்.1980 ஆம் ஆண்டு சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு நடவடிக்கை எடுத்த போது  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோஹன விஜேவீர அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால்  நாட்டில் பொருளாதார வலயங்கள் உருவாக்கப்படவில்லை.

1981 ஆம் ஆண்டு  ஜப்பான் நிறுவனம் இலங்கையில் வாகன உற்பத்திக்கு பிரவேசிக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி வீதிக்கு இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டது. இதனால் ஜப்பான் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேறியது.இதனால் பல கோடி ரூபா நட்டத்தை அரசாங்கம் அப்போதே எதிர்கொண்டது.பலர் தொழில்வாய்ப்புக்களை இழந்தனர்.

1980 ஆம் ஆண்டு ஆங்கில கல்வி முறைமைக்கு எதிராகவும் மக்கள்  விடுதலை முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டது. இன்றும் நடுத்தர மக்கள் ஆங்கில கல்வியில் பின்னடைந்துள்ளமைக்கு இதுவும் ஒரு காரணியாகும்.1981 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜயவர்தன ராமக வைத்திய கல்லூரியை ஆரம்பித்து வைத்தார். மக்கள் விடுதலை முன்னணி 1988 ஆம் ஆண்டு அந்தக் கட்டிடத்துக்குத் தீ வைத்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னாள் ஜனாதிபதி  ரணசிங்க பிரேமதாச அந்த மருத்துவ கல்லூரியை இழுத்து மூடினார்.இவற்றை பார்த்துக் கொண்டிருந்த மலேசியாவின் அப்போதைய தலைவர் மாதீர் மொஹமட் இலங்கையின் வைத்தியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அனைவரும் அங்கு சென்றார்கள். மலேசியாவில் சர்வதேச மட்டத்தில் மருத்துவ கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.இன்று இலங்கை மாணவர்கள் பல பில்லியன் டொலரை செலவழித்து மலேசியாவுக்கு மருத்துவ படிப்புக்காக செல்கிறார்கள். இந்த பாவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணியே பொறுப்புக் கூற வேண்டும். ஆகவே சாயம் வெளுத்து விட்டது. இனியும் 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று குறிப்பிடாதீர்கள் என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More