நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடலூர் சென்றுள்ளார். அங்குள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் நடைபெற்ற விழாவில் 44,690 பயனாளிகளுக்கு ரூ.387 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் அவர் பேசியதாவது;-
“தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுரை கூறுகிறார். கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? நாங்களா? மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை தருவோம் என்று மிரட்டுவதற்குப் பெயர் அரசியல் இல்லையா?
நாங்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக அரசின் நிதியை செலவு செய்பவர்கள். நீங்கள் அரசின் நிதியை மதவெறிக்காகவும், இந்தி, சமஸ்கிருத திணிப்பிற்காகவும் செலவு செய்யக் கூடியவர்கள். தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு வாங்கிக் கொண்டிருக்கும் வரியை தரமுடியாது என்று சொல்ல எங்களுக்கு ஒரு நொடி போதும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
கொடுத்துப் பெறுவதுதான் கூட்டாட்சி தத்துவம். அதைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவை ஆள்வதுதான் மிகப்பெரிய சாபக்கேடு. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியை வளர்ப்பதற்காக அல்ல, இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
தாய்மொழியை வளர்க்கப்போவதாக தர்மேந்திர பிரதான் கூறுகிறார். தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்கு தெரியும். இந்தி மொழியால் தங்கள் தாய்மொழியை தொலைத்துவிட்டு நிற்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.
தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் எதிரான எந்த செயல்பாடுகளும் நான் இருக்கும் வரை, தி.மு.க. இருக்கும் வரை இந்த மண்ணில் வர முடியாது. மக்கள் முன்னேற்றம் ஒருபக்கம், அதற்கான தடைகளை உடைப்பது மறுபக்கம் என இருபாதை பாய்ச்சலை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுபோன்ற தடைகள் எங்களுக்கு புதிது அல்ல. மக்கள் ஆதரவுடன் வெற்றி என்றும் தொடரும்.” இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.