சீமான் வீட்டின் காவலாளி உட்பட 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகின்ற 13ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக வளசரவாக்கம் காவல்துறையினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமானின் வீட்டில் அழைப்பாணையை ஓட்டிய போது, சில நிமிடங்களிலேயே கதவில் ஒட்டப்பட்ட அழைப்பாணை கிழிக்கப்பட்டது.
அந்த அழைப்பாணையைக் கிழித்தது ஏன்? என விசாரிக்க சீமான் வீட்டிற்குள் சென்ற காவல்துறையினர், அங்கிருந்த காவலாளியை அடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றினர். இவ்வாறு சீமான் வீட்டின் காவலாளி அடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றப்படும் காணொளி வெளியாகியிருக்கிறது என்பதுடன் அந்தக் காவலாளி ஓய்வுபெற்ற இந்திய இராணுவவீரர் என்பதும் தெரிய வந்துள்ளது. காவலாளியின் கைகளில் இருந்த கைத் துப்பாக்கியையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக சீமான் வீட்டில் இருந்த காவலாளி மற்றும் உதவியாளர் மீது காவல்துறையினர் தரப்பில் 2 முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. இதன்படி துப்பாக்கி காட்டி மிரட்டியதாக ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் முறைப்பாடு அளித்தநிலையில், உடனிருந்த காவலர்கள் தங்களைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட மற்றொருமுறைப்பாட்டின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேரை வரும் மார்ச் 13-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சீமான் , அரசியல் பழிவாங்கல் நோக்கத்திற்காக இவ்வாறு காவல்துறையினரும் தற்போதைய தமிழக அரசும் நடந்துகொள்கின்றதெனவும் அவர் வீட்டில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் இவாறு அத்துமீறி நாகரீகமற்றுச் செயற்படுகின்றனர் என்றும் கூறினார்.