புதுடில்லியில் நடைபெற்ற NXT மாநாட்டு நிகழ்வில் நேற்று (1/03/2025) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். உலகளாவிய நிர்வாகம், தொழினுட்பம் மற்றும் பொருளாதார மாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த நிகழ்வில், உலகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழிற்றுறை முன்னோடிகள் ஒன்றிணைந்து முதன்மையான உலகளாவிய சவால்களைப் பற்றி விவாதித்தனர்.
சந்திப்பைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தளமான X இல் பிரதமர் மோடி இந்தச் சந்திப்புக் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவில்
“NXT மாநாட்டில், எனது நண்பர் திரு. ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தேன். நம்முடைய ஊடாட்டத்தை எப்போதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன், மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது நோக்குநிலையால் ஈர்க்கப்பட்டேன்”
பெப்ரவரி 28 முதல் மார்ச் 1 வரை நடைபெற்ற இந்த NXT மாநாடானது புதுடில்லியின் பாரத் மண்டபத்திலேயே நடைபெற்றது. இதற்கு முன்பு G20 உச்சிமாநாடானது இந்த பாரத் மண்டபத்திலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் மற்றும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் இந்த நிகழ்வில் ஏனைய சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.