Home இலங்கை வடக்கு, கிழக்கில் இயங்கிய மிகப் பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும்

வடக்கு, கிழக்கில் இயங்கிய மிகப் பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும்

by editorenglish

பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிகப் பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17/03/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியினர் இரண்டாம் கட்டப் போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது.

1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன.

37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது. தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை  முகாம் வெளியில் வந்திருக்காது

ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே,  இது போன்ற  வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன. 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு  சத்துருக்கொண்டான் படை முகாமில்  4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில்  படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்

இந்த சத்துருக்கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது. அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு  கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல  முகாம்கள் காணப்பட்டன

சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது. ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது

உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காகப் பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More