பட்டலந்த வதை முகாம் போல் பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் கடந்த 30 வருடங்களாக இயங்கின. இது தொடர்பில் விசாரிக்க இந்த அரசு தயாரில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ளூராட்சி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறலை ஏற்றுக்கொள்ள இந்த அரசும் தயாரில்லை. அண்மையில், 4 பேரை பிரித்தானியா தடை செய்தது. அதனை எமது கட்சியும் வரவேற்றுள்ளது.
தற்போதைய அரசு இந்தத் தடையை, ஒரு தலைப்பட்சமான இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
பட்டலந்த அறிக்கை பற்றிப் பேசும் அவர்கள், பல வதை முகாம்கள் வடக்கு, கிழக்கில் இயங்கின. தங்கள் உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்தவர்கள் உள்ளனர். அதை விசாரிக்க தயாரில்லை. அதைப் பற்றிப் பேச அவர்கள் தயாரில்லை.
கடந்த கால அரசுகள் என்ன பதிலைத் தந்தார்களோ அதே பதிலைத்தான் இவர்களும் சொல்கின்றார்கள். அவர்களது செயற்பாடுகளை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.