கடந்தகால அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களைக் கடத்தியிருக்கிறார்கள்; படுகொலை செய்திருக்கிறார்கள் என்றும் 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் ஊடகவியலாளர்களே எண்ணிக்கையில் மிக மிக அதிகமென நாடாளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் 01.03.2025 அன்று உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்த சாணாக்கியன் அவர்கள், இந்த ஊடகவியலாளர் படுகொலைகள் குறித்துத் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் என்ன நடவடிக்கையை இதுவரை எடுத்திருக்கின்றது என்றும் வினாவெழுப்பினார்.
மேலும், கோத்தாய தலைமையிலான அரசாங்கத்தில் இது தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளக் குழுவொன்று நியமிக்கப்பட்டபோதும், இந்தக் கொலைகளானவை அரசியற் பழிவாங்கல்களாக இடம்பெற்றவை எனக் கூறி மூடிமறைக்கப்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

