கோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி, தீவிரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்குகிறது. இதில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் விதமாக ரஷிய, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு ‘பிரிக்ஸ்‘ ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மாநாடு ரஷியாவின் உபா நகரில் நடந்தது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகரான பனாஜி நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.
முதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூட்டான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ‘பிம்ஸ்டெக்‘ அமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற உள்ளது. இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பிரிக்ஸ் மாநாட்டின் இடையே புதின், ஷின்பிங் ஆகியோரை மோடி சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்போது காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது பற்றி மோடி எடுத்துக் கூறி பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்கிறார். மேலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் அவர் வற்புறுத்துவார்.
பாகிஸ்தான் தொடர்ந்து இடையூறு செய்தால், இந்தியா பார்த்துக்கொண்டு இருக்காது, பதிலடி கொடுத்தே தீரும் என்று ஜின்பிங்கிடம், மோடி தெரிவிக்க உள்ளார். இவ்விரு தலைவர்களும் மாலை 5.40 மணியளவில் சந்திக்க உள்ளதாகவும், சீன அதிபர் மதியம் 1.10 மணிக்கு இந்தியா வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.