முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார். ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரிடமிருந்த காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், கடந்த செவ்வாய்க்கிழமை முதல், பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா பதவி வகிக்கிறார். ஜெயலலிதா பரிந்துரைப்படிதான், பன்னீர்செல்வத்திற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இத்தகவலை முறைப்படி அறிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளன. இது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.