காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் புகையிரத மறியல் போராட்டம் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் புகையிரத மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை ரயில் நிலையத்தில் புகையிரத மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றுவதாக கோஷம் எழுப்பிய நிலையில் திருப்பூர் புகையிர நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகளும், அனைத்துக் கட்சியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த போராட்ட நடவடிக்கையினால் இதுவரை எந்த இடத்திலும் போக்குவரத்து பாதிக்கவில்லை என புகையிரத நிர்வாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.