குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்:-
பூகோள அரசியல் பற்றிக் கதைத்தால், தங்களது எஜமானர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆபத்து வரும். என்பதனால் தான் சுமந்திரன் மேடைகளில் பூலோக அரசியல் பற்றி கதைப்பதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , கேவலம் அங்கஜன், விஜயகலா மற்றும் டக்ளஸ் பெற்ற வாக்குகள் எனின் ஏன் அதைப்பற்றிக் கதைக்கின்றீர்கள் எம் மீது இரகசிய காதல் போன்று செல்லும் இடமெல்லாம் எம்மை பற்றி கதைக்கின்றார்கள். பதட்டப்படுகின்றார்.
தற்போது சுமந்திரனின் நிலமைகள் இறுகிக்கொண்டு வருகின்றது. சொன்ன பொய்கள் எல்லாவற்றினையும் திசை திருப்புவதற்காக இவ்வாறு சுமந்திரன் கூறுகின்றார் போலிருக்கின்றது.
தமிழ் மக்கள் சுமந்திரனின் கருத்துக்களைக் கேட்டு செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைந்து கொண்டு வருகின்றன. அதனை நினைத்து அவர் பதற்றமடைகின்றார்.
அரசியல் அமைப்புப் பற்றி கதைக்க முற்படும் போதெல்லாம் அரசியல் அமைப்புப் பற்றி தமக்கு மட்டும் தான் தெரியுமென சுமந்திரன் அனைத்து இடங்களிலும் தெரிவிக்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தனுக்குக் கூட தெரியுமென அவர் சொல்வதில்லை. எல்லாமே தான் என்றவாறு கதைத்துக்கொண்டு திரிகின்றார்.
இனப்பிரச்சினை குறித்து ஒரு திட்டத்தினை வகுக்க முடியாது. தமிழ் மக்களின் முக்கியத்துவம் விளங்காது. தொடர்ந்தும் இவ்வாறான பொய்களைக் கூறிக்கொண்டிருந்தால் தனது அரசியலுக்கு ஆபத்து வந்து விடுமென பயப்படுகின்றார் போலிருக்கின்றது.
ஒற்றையாட்சிக்குள் சதித்திட்டங்களை தீட்டும் அரசு.
ஒற்றையாட்சிக்குள் தீர்வினை ஏற்றுக்கொள்வதற்கான சதித்திட்டங்களை அரசாங்கமும், குறிப்பிட்ட தமிழ் தலைமைகளும் முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன.அவற்றினை தமிழ் மக்கள் உணர்ந்து விழிப்புடன் செயற்பட வேண்டும்.
போர் முடிவடைந்த பின்னர் இலங்கையில் ஒரு அரசியல் அமைப்பு ஒற்றையாட்சியின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையிலும் மாற்றங்களின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் மூலம் தமிழ் தேசம் அங்கிகரிக்கும் சமஷ்டி தீர்வின் அடிப்படையில் தீர்வினை அரசாங்கம் முன்வைக்கப் போவதில்லை.
2010 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த போது, ஓற்றையாட்சிக்குள் தீர்வு காணுவதற்கும், தமிழ் அரசியலில் இருந்து தேசிய வாதத்தினை நீக்குதவற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்திருப்பதாகவும் தொடர்ந்து அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகினோம்.
கடந்த 2 வருடங்களாக கூறிவந்த விடயங்களை நிரூபிக்கும் வகையில் கடந்த 2 வாரங்களாக ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயம் பற்றிய கருத்துக்கள் நிலவுகின்றன.
கடந்த ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உட்பட நல்லிணக்கத்தின் தலைவியாக இருக்கும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயத்தினையே வலியுறுத்தி வருகின்றார்கள்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் இணங்கி இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.
மிக வெளிப்படையாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் அவ்வாறான நிலமைக்கு இணங்கியிருப்பதாக பௌத்த குருமார்களுக்கு முன்னிலையில் வழங்கியிருக்கின்றார்கள்.
புதிய அரசியல்அமைப்பினை கொண்டுவரவுள்ளதாக அரசாங்கம் உத்தியோக பூர்வ அறிவித்தலை விடுத்த நிலையில், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.
ஓற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டு வருவதற்கு சதி நடப்பதாக தமிழ் மக்கள் கூறி, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வுத் திட்டத்தினை முன்வைத்துள்ளார்கள்.
விரும்பிய ஆட்சியை கொடுப்பதற்கு சர்வதேசங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் நடைபெற்ற அநியாயங்கள் நடைபெறுகின்றன என தமிழ் மக்கள் கூறுவதனை சர்வதேசமும் செவிமடுக்கத் தயாராக இல்லை.
அந்தவகையில் எழுக தமிழ் ஆரம்பம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்படும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக பூர்த்தி செய்யக்கூடிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது.
ஒற்றையாட்சியை ஏமாற்றி அவற்றினை தமிழ் மக்கள் ஆதரிக்கும் முறைமையினை அரசாங்கமும், தமிழ் தலைமைகளும் ஏற்படுத்தும் நிலமையில் இருக்கின்றார்கள்.
எனவே, ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற விடயத்தினை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளக் கூடிய வகையில், சிவில் அமைப்புக்களும், ஊடகங்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென மேலும் தெரிவித்தார்.