இந்திய கைத்தொலைபேசிச் சந்தை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் கைத் தொலைபேசி நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான இலாப இழப்பைச் சந்தித்து வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை கைத் தொலைபேசி நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் சுமார் 4.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருமான இழப்புடன் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் நிதிச்சுமைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு குறித்த நிறுவனங்கள் முகம் கொடுத்துள்ளன.
இந்தியாவில் உள்ள கைத் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிகளால் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. எனினும் இவை வர்த்தக ரீதியில் குறித்த நிறுவனங்களுக்கு தோல்வியை ஏற்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக, சுமார் 1.50 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இந்தியப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.