155
அரசியல் கைதிகள் விடயத்தில் தீர்வு கிடைக்காவிடின் யாழ் வரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
அனுராதபுர சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 16 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஆதாரவான போராட்டங்களும், தொடர்கின்றன.
கைதிகளின் உடல் நிலை தொடர்பிலான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை சிறைச்சாலை அதிகாரிகள் கூட அவர்களிடம் கரிசனை இல்லாமல் உள்ளனர்.
இந்த கைதிகள் பிணையோ விடுதலையோ கோரவில்லை. தமது வழக்கினை வவுனியா நீதிமன்றில் நடத்த வேண்டும் என்றே கோரிக்கை விடுக்கின்றனர்.
சாட்சியத்திற்கு அச்சுறுத்தல் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்து நாடு பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் , சாட்சிக்கு யாரால் அச்சுறுத்தல் என்பதனை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
அரசியல் கைதிகளின் விடயத்தில் தீர்வு கிடைக்காவிடின் யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வந்தால் கடும் காட்டமான எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
எதிர்வரும் 13ஆம் திகதி கடையடைப்பு போராட்டத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பை கோருகின்றோம். அத்துடன் அன்றைய தினம் வடமாகாண ஆளூநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதற்கும் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.
அரசியல் கைதிகள் விடயத்தில் 13 ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்கவில்லை எனில், 14ஆம் திகதி யாழில் நடக்கும் நிகழ்வை புறக்கணிக்க கோருவோம். மீறி வந்தால் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்போம். என தெரிவித்தார்.
Spread the love