இந்தியா பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் 100வது இடத்துக்கு சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேலும் 3 இடங்கள் பின் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் உள்ள 119 நாடுகளில் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் மேற்கொண்ட ஆய்வுகளின் இது தெரிய வந்துள்ளது. இந்தநாடுகளில் பெரும்பாலானவற்றில் உணவு தானியங்கள் உற்பத்தி குறைவு காரணமாக பட்டினி நிலை தோன்றியுள்ளது.
நேற்றையதினம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுகளின் முடிவுகளின்படி இந்தியாவில் பட்டினியாக கிடப்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளமையானது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஆசிய கண்டத்தில் இந்தியா அதிக பட்டினியாளர்களைக் கொண்டதாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, இலங்கை, நேபாளம், மியான்மர், பங்களாதேஸ் ஆகியவை இந்தியாவை விட குறைவான சராசரி பட்டினியாளர்களைக் கொண்டுள்ளன. இதன் படி இலங்கை 84வது இடத்திலும் சீனா 29வது இடத்திலும், நேபாளம் 72, மியான்மர் 77, பங்களாதேஸ் 88-வது இடங்களில் உள்ளன.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மட்டுமே இந்தியாவையும் விட பின்னால் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது