2018ம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் மக்களுக்க நிவாரணங்களை வழங்கும் வகையில் அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் ஈட்டுவோர் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு சலுகைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வறிய குடும்பத்தினர் கடன்களை மீளச் செலுத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறுங்கடன் திட்டங்களினால் வடக்கு கிழக்கு வாழ் வறிய குடும்பங்கள் பெரும் பொருளாதார சுமைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில நிதி நிறுவனங்கள் வறிய மக்களுக்கு தாமகவே சென்று விண்ணப்பங்களை நிரப்பி கடன் வழங்கி பின்னர் அவர்களை துன்புறுத்தி பணத்தை மீள அறவீடு செய்வதாகவும் கூடுதல் வட்டியை பெற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் மக்கள் மிரட்டப்பட்டு பணம் அறவீடு செய்யப்படுகின்றது என தாம் அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறு கடன் பெற்றுக்கொண்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு வரவு செலவுத்திட்டத்தில் சில யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.