விவசாயிகள் நலனுக்காக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பொதுநல வழக்கு மையம் மூலமாக உச்சநீதிமன்றில் விவசாயிகள் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. அந்த மனுவில் 40 ஆயிரம் கோடி ரூபா வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும், பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திர மனுவில், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வறட்சி ஏற்பட்டுள்ளது எனவும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 4 ஆயிரம் கோடிக்கு ரூபாவுக்கு மேல் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது எனவும் தற்கொலை உள்ளிட்ட காரணங்களால் இறந்த 82 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபா நிதிஉதவி அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலைமை பற்றிய கள நிலவரத்தை அறிந்து கொள்ள மாநில அரசிடம் இருந்து எனக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது. என நீதிமன்ற ஆNலூசகர் தெரிவித்ததனைத் தொடர்ந்து விவசாயிகள் நலனுக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி 4 வாரங்களுக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.