Home இலங்கை ஐ.நா அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? – நிலாந்தன்:-

ஐ.நா அரசாங்கத்தைப் பின்தொடர்கின்றதா? – நிலாந்தன்:-

by editortamil


‘நிலைமாறு கால நீதியை ஸ்தாபிப்பதற்கான கடப்பாட்டை ஒப்புக்கொண்டதற்கும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கும் இடையில் நீண்ட கால தாமதம் எனப்படுவது ஆபத்துக்களை ஏற்படுத்தும். காத்திருப்பது எனப்படுவது விலை கொடு;க்கத் தேவையில்லாத ஒரு மாற்று வழி என்ற மனப்பதிவு யாரிடமும் இருக்கக்கூடாது…………… விளைவாக நிலைமாறு கால நீதி எனப்படுவது சாராம்சத்தில் பெரும்பான்மைச் சமூகத்திற்கு எதிரானது போலவும் சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றை மட்டும் பிரதிநிதிப்படுத்துவது போலவும் ஏனைய சமூகங்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டது போலவும் ஒரு தோற்றம் உருவாகி விடும்………’

இவ்வாறு கூறியிருப்பவர் ஐ.நாவின் நிலைமாறு கால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளரான பாப்லோ டி கிறீவ். இலங்கைக்கான இருவாரகால விஜயத்தின் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது வரையிலும் அவர் இலங்கைக்கு ஐந்து தடவைகள் வந்து சென்றுள்ளார். அவருடைய அண்மைய விஜயத்தின் போது இலங்கைத் தீவில் அவர் பெரும்பாலும் எல்லாத் தரப்புக்களையும் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்புக்களின் தொகுப்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களும் உண்டு, விமர்சனங்களும் உண்டு. ஆயுத மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்புக்கள் மீதும் விமர்சனங்கள் உண்டு. நிலைமாறு கால நீதி எனப்படுவது அனைத்து சமூகங்களுக்கும் உரியது என்ற கருத்தை அவர் வலியுறுத்துகிறார். எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று அவர் கூறுகிறார். எனவே பாதிக்கப்பட்ட சகலருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்துகிறார்.

‘நிலைமாறு கால நீதி எனப்படுவது சூனியக்காரியை வேட்டையாடுவதைப் போன்றதல்ல’…….’படையினரை நீதிமன்றில் நிறுத்த மாட்டோம் என்று மேடைப் பேச்சக்களில் கூறப்படுவது நிலைமாறு கால நீதிக்குரிய பொறுப்புக்கூறலின் இலக்குகளை பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலுக்கு எதிரானது என்று முன்மொழிவதன் மூலம் பிழையாக வியாக்கியானம் செய்யப்பபடுவதாக எனக்குத் தோன்றுகிறது. அதோடு,மனித உரிமைகள் சட்டத்தையும், போர்ச் சட்டங்களையும் மீறிய எவரும் கதாநாயகர் என்று அழைக்கப்பட முடியாது என்பதும் மறக்கப்படுகிறது……….இது நீதித்துறையின் சுயாதீனத்தை மீறுவதைப் போன்றதாகும்.எல்லாவற்றையும் விட மேலாக, அதற்கு அனைத்துலக உத்தரவாதம் கிடையாது என்பதைச்சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. அண்மையில் பிரேசிலில் முன்னாள் படை உறுப்பினருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு எதை வெளிக்காட்டுகிறது என்றால், பொறுப்புக் கூறலை உள்நாட்டில் இல்லையென்றால் அதை வெளிநாடுகளில்; தேடவேண்டியிருக்கும் என்பதைத்தான்.’என்றும்அவர் கூறியிருக்கிறார்.

பப்லோ டி கிறீவ் மட்டுமல்ல அவர் வருவதற்கு சில வாரங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து போன மற்றொரு சிறப்பு அறிக்கையாளரான பென்எமேர்சனும் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போதிருந்தநீதி அமைச்சரோடு நடாத்திய உரையாடலின் போது இடையில் உரையாடலை முறிக்கும் அளவிற்கு காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இலங்கைத்தீவின் சட்டமா அதிபருக்கு எதிராக அவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

பப்லோ டி கிறீவும், பென்எமேர்சனும் மட்டுமல்ல ஐ.நாவில் மனித உரிமைகள் ஆணையரும் ஐ.நாவின் 36வது கூட்டத்தொடரின் போது இலங்கை அரசாங்கத்தை எச்சரிக்கும் தொனியில் பேசியிருக்கிறார்.’அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தையும், மனிதாபிமானச் சட்டங்களையும் மீறியதான குற்றச்சாட்டுக்கள் பொறுத்து இலங்கை அரசாங்கம் நம்பகத்தன்மை மிக்க நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் போது அனைத்துலக நீதி விசாரணைக்கான தேவை மேலும் அதிகரிக்கின்றது’.என்று அவருடைய உரையில் காணப்படுகின்றது.

இவ்வாறு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களும்;, ஐ.நா உயர் அதிகாரிகளும் தொடர்;ச்சியாக இலங்கைக்கு வந்து போவதும் அறிக்கை விடுவதும் ஒரு நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டதுதான். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான செயற்குழு, சி;த்திரவதைக்கும் ஏனைய மனிதாபமானமற்ற குரூரமான நடவடிக்கைகளுக்கும் கீழ்மைப்படுத்தும் தண்டனைகளுக்குமான சிறப்பு அறிக்கையாளர், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் சுயாதீனத்திற்கான சிறப்பு அறிக்கையாளர், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சிறப்பு அறிக்கையாளர் போன்றோர் இவ்வாறு இலங்கைத்தீவுடன் இடையூடாடி வருவதாக பப்லோ டி கிறீவ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக கடந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு மேலும் ஈராண்டு கால அவகாசம் வழங்கப்பட்ட பின் இவ்வாறு ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களும், உயர் அதிகாரிகளும் ஒரு நிகழ்;ச்சி நிரலின் பிரகாரம் இலங்கைக்கு விஜயம் செய்வர் என்று கூறப்பட்டது. அதன்படி அண்மை மாதங்களாக மிகக் குறுகிய கால கட்டத்திற்குள் பல்வேறு ஐ.நா உத்தியோகத்தர்களும் இலங்கைக்கு வந்து செல்கிறார்கள். இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தோற்றம் எழுகிறது. அதாவது இலங்கைத் தீவானது ஐ.நாவின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது என்பதே அது. தமிழ் மக்கள் மத்தியில் இது ஐ.நாவின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த உதவக்கூடும். ஆனால் இலங்கைத்தீவின் கள நிலவரம் தமிழ் மக்கள் அவ்வாறு கற்பனை செய்வதற்கு உரியதொன்றாக இல்லை.

பென்எமேர்சனின் அறிக்கைக்குப் பின்னர்தான் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்ற ஒரு முன்னாள் இயக்கத்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பப்லோ டி கிறீவின் விஜயத்திற்குப் பின்னரும் அவர் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாகவும், கைதிகள் தொடர்பாகவும் பிரஸ்தாபித்த பின்னரும் கூட அரசியல்க் கைதிகளின் விடயத்தில் திருப்பகரமான முடிவுகள் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் எச்சரிக்கைக்குப் பின்னரும்; ரணிலும், மைத்திரியும் தமது படை வீரர்களை பாதுகாக்கப் போவதாக அழுத்தம் திருத்தமாகக் கூறி வருகிறார்கள்.

குறிப்பாக பப்லோ டி கிறீவ் நிலைமாறுகால நீதிக்கான சிறப்பு அறிக்கையாளர் ஆவார். நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்குரிய நான்கு பெரும் தூண்களில் ஒன்று மீள நிகழாமையாகும். மீள நிகழாமை எனப்படுவது ஒரு நாட்டின் அமைதியின்மைக்குக் காரணமான மூல காரணத்தை கட்டுப்படுத்துவதுமாகும். அதாவது எந்த ஒரு மூலகாரணத்தின் விளைவாக ஒரு நாட்டில் மோதல்கள் ஏற்படுகின்றனவோ அந்த மூல காரணத்தை இல்லாமற் செய்வதுதான். அதன்படி சிங்கள பௌத்த தேசியம்,தமிழ்த்தேசியம் ஆகியவை மீள நிகழாமை என்ற பகுதிக்குள்ளேயே வரும் என்று யஸ்மின்ஸூக்கா ஒரு கத்தோலிக்கத் தமிழ் மதகுருவிடம் கூறியிருக்கிறார். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய யாப்புருவாக்க முயற்சியையும் இப்பிரிவின் கீழ் வைத்தே பப்லோ டி கிறீவ் அறிக்கையிட்டுள்ளார். ஆனால் இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னரான இலங்கைத் தீவின் களயதார்த்தம் எவ்வாறுள்ளது?

மகாநாயகர்கள் புதிய யாப்புருவாக்கத்தை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார்கள். இத்தனைக்கும் புதிய யாப்பில் பௌத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முதன்மை பாதுகாக்கப்படும் என்று ரணிலும், மைத்திரியும் உறுதி கூறிய பின்னரும் மகாநாயக்கர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படாது என்பது தெளிவாகக் கூறப்பட்ட பின்னரும் மகாநாயக்கர்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் ஓர் அடிப்படையான விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். மீள நிகழாமைக்குக் கீழ் இலங்கைத்தீவில் அகற்றப்பட வேண்டிய மூலகாரணம் எனப்படுவது சிங்கள பௌத்த மேலாண்மைவாதம்தான். இம்மூல காரணத்தை அகற்றாமல் மீள நிகழாமை பற்றி உரையாட முடியாது. ஆனால் இடைக்கால அறிக்கைக்குப் பின்னரான அரசியல் நிலவரத்தின் படி மூலகாரணம் அதே பலத்தோடு ஓர்மமாக இருப்பது தெரிய வருகிறது. அதாவது நிலைமாறு கால நீதியின் ஒரு தூணைக் கட்டியெழுப்பவே முடியாது. ஆயின் இலங்கைத்தீவின் நிலைமாறு கால நீதி எனப்படுவது மூன்று தூண்களால் அதுவும் பொய்க்கட்டுக் கட்டப்பட்ட தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம் தான். இதை இன்னும் தெளிவாகக் கூறினால் நிலைமாறு கால நீதி என்பதே இலங்கைத் தீவைப் பொறுத்தவரை ஒரு கவர்ச்சியான பொய்தான். ஏனெனில் நீதி எனப்படுவது யாருக்கு? பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான். பப்லோ டி கிறீவ் கூறுகின்றார் எல்லாச் சமூகங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் உண்டு என்று. அப்படியானால் சிங்கள மக்களுக்கு வழங்கப்படும் நீதியும், தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா? அதாவது வென்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும், தோற்றவர்களுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா? மூல காரணத்தைப் பேணி வைத்திருக்கும் ஒரு தரப்பிற்கும், விளைவின் விளைவை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கும் ஒரே விதமான நீதியை வழங்க முடியுமா? இவை அனைத்தையும் பொழிவாகச் சொன்னால் பெரிய மீனுக்கு வழங்கப்படும் நீதியும், சிறிய மீனுக்கு வழங்கப்படும் நீதியும் ஒன்றாக இருக்க முடியுமா?

நேற்று முன்தினம் அமைச்சர் மனோ கணேசன் முகநூலில் ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். இடைக்கால அறிக்கை தொடர்பில் சிங்கள, தமிழ் சமூகங்கள் மத்தியில் காட்டப்படும் எதிர்ப்புக்களை இரண்டுக்கும் மத்தியில் இருந்து ஒரு துறவு நிலைச் சிரிப்போடு சிந்திக்க வேண்டியிருப்பதாக அவர் அக்குறிப்பில் எழுதியிருந்தார். அதாவது ஒடுக்குபவனின் எதிர்ப்பையும், ஒடுக்கப்படுபவரின் எதிர்ப்பையும் அவர் இரு வேறு எதிர் நிலைகளாகக் காட்டி விட்டு மத்தியிலிருந்து சிந்திப்பதாகத் தெரிகிறது. ஆனால் தமிழ் மக்கள் இடைக்கால அறிக்கையை எதிர்ப்பது தமக்குக் கிடைக்கவிருக்கும் நீதி போதாது என்பதற்காக. சிங்கள மக்கள் மத்தியில் இருப்பவர்கள் எதிர்ப்பது தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என்பதற்காக. இரண்டும் ஒன்றல்ல. ஐ.நாவின் நிலைமாறுகால நீதி இலங்கைத்தீவில் அதன் பிரயோக வடிவத்தில் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கின்றதா?

தமிழ் மக்கள் ஐ.நாவிடம் கேட்டது ஓர் இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை. ஆனால் ஐ.நா தமிழ் மக்களுக்கு வழங்கியதோ நிலைமாறு கால நீதியை. அதுவும் கூட மூன்று எளிதில் உடையக்கூடிய தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம்தான். பப்லோ டி கிறீவ் கூறுவது போல விரிவான ஒரு செய்முறையை இங்கு அமுல்ப்படுத்தவே முடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை நிலைமாறு கால நீதி எனப்படுவது ஐ.நாவிற்காக பொய்யுக்குச் செய்து காட்டப்படும் ஒரு வீட்டு வேலை. என்.ஜி.ஓக்களைப் பொறுத்தவரை அது ஒரு காசு காய்க்கும் மரம். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை என்.ஜி.ஓக்கள் நடாத்தும் கூட்டங்களுக்குப் போய் ஒரு சாப்பாட்டுப் பார்சலையும், பயணச் செலவையும் வாங்கிக் கொண்டு வரும் ஒரு விவகாரம். இது விடயத்தில் நிலைமாறு கால நீதி எனப்படுவது அதன் அரசியல் அடர்த்தி நீக்கப்பட்டு என்.ஜி.ஓக்களின் கோப்பு வேலைகளுக்கான ஒரு நிகழ்ச்சித்திட்டமாக மாற்றப்பட்டிருப்பது ஐ.நாவிற்குத் தெரியாதா?

பப்லோ டி கிறீவ் யாழ்ப்பாணத்தில் ஒரு கருத்தரங்கில் உரையாற்றினார். ஆனால் அவரது உரை உரிய முக்கியத்துவத்தோடு உள்ளூர் ஊடகங்களில் பிரசுரிக்கப்படவில்லை. அதாவது ஐ.நா இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூறும் ஒரு பொறிமுறைக்குள் சுற்றி வளைத்து வருகிறது என்பதனை உள்ளூர் ஊடகங்கள் நம்பத் தயாரில்லை. அதுதான் உண்மையும் கூட. ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரும், தூதுவர்களும் தெரிவிக்கும் கருத்துக்களும், வெளியிடும் அறிக்கைகளும் காட்டமானவைகளாக இருக்கின்றன. ஆனால் ஐ.நாவில் நிறைவேற்றப்படும் உத்தியோகபூர்வ தீர்மானங்களோ இலங்கை அரசாங்கத்திற்கு செல்லமாக காதை முறுக்குபவைகளாகக் காணப்படுகின்றன. இது ஓர் அனைத்துலக யதார்த்தம்தான். சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஐ.நா தூதுவர்கள் போன்றோர் தொழில் சார் திறன்களைப் பெற்றவர்கள். ‘விசேட அறிக்கையாளர் எனப்படுவோர் ஐ.நாவின் அலுவலர்கள் அல்ல. அவர்கள் எப்பொழுதும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், ஐ.நா பொதுச் சபைக்கும் அறிக்கையிடுவதற்கானஆணையைமட்டுமே கொண்டுள்ளார்கள்’ என்று பப்லோ டி கிறீவ் யாழ்ப்பாணத்தில் நடந்த கருத்தரங்கில் தெரிவித்திருக்கிறார்.எனவே சிறப்பு அறிக்கையாளர்களின் அறிக்கைகள் தொழில்சார் தேர்ச்சிகளோடு காணப்படும். அவை மனித உரிமைகளுக்கு ஒப்பீட்டளவில் கிட்டவாகக் காணப்படும். தமிழ் மக்கள் உலக சமூகத்தில் நம்பிக்கை இழப்பதை தடுக்க இவ்வறிக்கைகள் உதவக்கூடும். அனைத்துலக நீதி தொடர்பில் தமிழ் மக்களின் காத்திருப்பை இவை ஊக்குவிக்கும்.

நிலைமாறுகால நீதி எனப்புடுவதே அதன் சாராம்சத்திலும் பிரயோகத்திலும் பொறுப்புக்கூறல்தான. பொறுப்புக்கூறல் எனப்படுவது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தரப்பிற்கும் மட்டும் உரியதல்ல. ஐ.நாவிற்கும் உரியதுதான். உலக சமூகத்திற்கும் உரியதுதான். இறுதிக்கட்டப் போரின் போது ஆயுதங்களை வழங்கிய எல்லா நாடுகளும் பொறுப்புக் கூற வேண்டும். இறுதிக்கட்டப் போரின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கிய எல்லா நாடுகளும் பொறுப்புக் கூற வேண்டும். தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் பொழுது மௌனமாகக் காணப்பட்ட எல்லாத் தரப்புக்களும் பொறுப்புக் கூற வேண்டும். ரணிலையும், மைத்திரியையும், சட்டமா அதிபரையும் குற்றஞ்சாட்டினால் மட்டும் போதாது. அதோடு சேர்த்து ஐ.நாவும் பொறுப்புக் கூறலில் தனக்கிருக்கும் பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.ஐ.நா அலுவலர்கள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் கூற்றுக்களுக்கும்,அறிக்கைகளுக்கும் அந்தப் பொறுப்பை ஓரளவுக்காவது பிரதிபலிக்கின்றன.ஆனால் ஐ.நாவின் தீர்மானங்களோ அரசுகளின் நலன்களையே பிரதிபலிக்கின்றன. ஏனெனில் அது அரசுகளின் நீதியாகும். அரசுகளின் நீதி எனப்படுவது ராஜீய நலன்களின் அடிப்படையிலானது. இவ்வாறு ஐ.நா அலுவலர்கள் மற்றும் சிறப்பு அறிக்கையாளர்களின் கூற்றுக்களுக்கும்,அறிக்கைகளுக்கும் ஐ.நாத் தீர்மானங்களுக்கும் இடையில் காணப்படும் இடைவெளிதான் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியின் பிரயோக வடிவமாகும்.அதாவது பொய்க்கட்டுக் கட்டப்பட்ட தூண்களால் தாங்கப்படும் ஒரு கட்டடம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More