உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தின் வைரவிழா கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ராம்நாத் கோவிந்த், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் நகல்கள் 24 அல்லது 36 மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்ற போதும் பல்வேறு மொழிகளைக் கொண்டது இந்தியாவில் தீர்ப்பின் முக்கியமான நுட்பமான விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் மனுதாரருக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்புள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் தீர்ப்பின் விவரங்களை அறிய வழக்கறிஞரையோ, பிறரையோ நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
சமூகத்தில் பின் தங்கியவர்களும், நலிவுற்றோரும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். எனவே உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.