2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு திகதியை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீண்டும் ஒத்திவைத்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் திகதி தீர்ப்பு திகதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தீர்ப்பு எழுத தாமதம் ஆனதால், நவம்பர் 7-ம் திகதி தீர்ப்பு தேதி வெளியாகும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.
அதன்படி, தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதை நீதிபதி ஷைனி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பு தயாராகாததால் மீண்டும் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு தயாராவதற்கு மேலும் 3 வார கால அவகாசம் தேவைப்படுகிறது எனக் கூறிய நீதிபதி, டிசம்பர் 5-ல் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.