பெங்களூர் சிறையில் சசிகலா சிறப்பு சலுகை பெற்ற விவகாரத்தில், லஞ்ச முறைப்பாடு குறித்து விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை என கர்நாடக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா மத்திய சிறையில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சிறைத்துறை டிஐஜி ரூபா, “சசிகலா, அப்துல் கரீம் தெல்கி உள்ளிட்ட கைதிகள் சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் .2 கோடி ரூபா வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்ட குழு, கடந்த 3 மாதங்களாக சிறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட கைதிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து வினய் குமார் அண்மையில் 300 பக்க அளவிலான அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், “சிறையில் சசிகலா, தெல்கி உள்ளிட்ட விஐபி கைதிகள் சிறப்பு சலுகை அனுபவித்தது உண்மைதான். சசிகலாவுக்காக அதிகாரிகள் 5 அறைகளை ஒதுக்கியுள்ளனர். சிறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவையை சசிகலா சாப்பிட்டுள்ளார். சசிகலாவுக்கு உதவுவதற்காக உதவியாளர்கள், வரவேற்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சிறையில் அவர் சீருடை அணியவில்லை என்றும் தெரியவந்துள்ளது. எனவே கடமையை செய்ய தவறிய சிறைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் டிஐஜி ரூபா கூறும்போது, “நான் முறையாக விசாரித்து அளித்த அறிக்கையை, தற்போது வினய் குமார் தலைமையிலான குழுவின் அறிக்கை உறுதி செய்துள்ளது. ஆனால் டிஜிபியாக இருந்த சத்திய நாராயண ராவ் என் முறைப்பாட்டை சந்தேகித்து வேறு துறைக்கு மாற்றியது இப்போது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஊழல் அதிகாரிகளை தப்பிக்க விடக்கூடாது. என வலியுறுத்தி உள்ளார்.