தெற்கு மடகாஸ்கரில் 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தெற்கு மடகாஸ்கரில், எல் நினோ என்ற வானிலை கால மாற்றத்தால் மோசமடைந்துள்ள, கடுமையான வறட்சி காரணமாக, கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆண்ரோய் என்ற பகுதியில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 80 வீதம் அளவில் குறைந்துள்ளதாகவும் மரவள்ளிக்கிழங்கு உட்பட, பிற அத்தியாவசியப் பொருட்கள் மிகவும் குறைந்த அளவே கையிருப்பில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் உணவுகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. விதைகளை சாப்பிட்டும், தங்கள் விவசாய கருவிகள் மற்றும் விலங்குகளை விற்றுமே அங்குள்ள மக்கள் பசியை சமாளித்து வருகின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.