அயோத்தி விவகாரத்தில் இந்து-முஸ்லிம் தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் – பாபர் மசூதி நிலப் பிரச்சினை நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிலையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சமரசம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.
இதுதொடர்பில் உ.பி. ஷியா மத்திய வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்வி கடந்த மாதம் ரவிசங்கரை பெங்களூருவில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில், ரவிசங்கர் நேற்று முன்தினம் அயோத்திக்கு சென்று அங்குள்ள இந்து தரப்பினரையும் வழக்கின் மற்றொரு மனுதாரரான நிர்மோஹி அகாடாவின் சாது திரேந்தர தாஸையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, ரவிசங்கர் முஸ்லிம் தரப்பின் முக்கிய மனுதாரரான ஹாசீம் அன்சாரியின் மகன் இக்பால் அன்சாரியையும் மற்றொரு முஸ்லிம் தரப்பு மனுதாரரான ஹாஜி மஹபூப்கானையும் சந்தித்தார். இந்தநிலையில் அயோத்தியில் இரு தரப்பினரையும் சந்தித்ததால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகவும் இது சாதகமான சூழலை காட்டுவதாகவும் ரவிசங்கர் . நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் அனைவரையும் சந்தித்து அவர்கள் கூறுவதை கேட்க விரும்பியதாகவும் சமரசம் என்பது ஒரு நீண்ட பணி என்பதனால் இதில் ஒரு நல்ல உடன்படிக்கை ஏற்பட சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளர்h. இந்தப் பிரச்சினையில் இருந்து இரு தரப்பினரும் விடுபட விரும்புவதால், நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன் எனவும அவர் தெரிவித்தர். எதிர்வரும் டிசம்பர் 5ம் திகதி முதல் ராமர் கோயில்-பாபர் மசூதி நிலப் பிரச்சினை தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தினமும் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.