டெல்லியில் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை உலங்குவானூர்தி மூலம் தூக்கி இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டெல்லியில் கரோல் பாக் பகுதியில் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஒரு தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தது. நேற்றையதினம் இவ்வழக்கு குறித்த விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் கரோல் பாக் பகுதியில் 108 அடி உயரமுள்ள அனுமன் சிலையை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளன.
ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அனுமன் சிலையை உலங்குவானூர்தி மூலம் தூக்கி இடமாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக துணை நிலை ஆளுநரிடம் பேச வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் விண்ணைத் தொடும் கட்டிடங்கள் கூட முழுமையாக இடமாற்றம் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் சட்டத்தை அமுல்படுத்துமாறு மாநகராட்சிக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதும் சட்டத்தை அமுல்படுத்த யாரும் விரும்பவில்லை எனத் தெரிவித்து வழக்கினை எதிர்வரும் 24-ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.